Enable Javscript for better performance
விழுப்புரத்தில் திமுக நகரச் செயலர் வெட்டிக்கொலை: கடையடைப்பு, போலீஸ் குவிப்பு- Dinamani

சுடச்சுட

  

  விழுப்புரத்தில் திமுக நகரச் செயலர் வெட்டிக்கொலை: கடையடைப்பு, போலீஸ் குவிப்பு

  By விழுப்புரம்  |   Published on : 15th September 2016 10:07 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  விழுப்புரத்தில் புதன்கிழமை காலை நடைப்பயிற்சிக்குச் சென்ற திமுக நகரச் செயலர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
   இந்தச் சம்பவத்தைக் கண்டித்து கடைகள் அடைக்கப்பட்டன. பதற்றம் நிலவியதால், போலீஸார் பாதுகாப்புக்கு குவிக்கப்பட்டனர்.
   விழுப்புரம் கே.கே. சாலை கணபதி லேஅவுட் பகுதியைச் சேர்ந்தவர் செல்வராஜ் (45). விழுப்புரம் நகர திமுக செயலரான இவர், பொன்முடியின் உதவியாளராக இருந்தார்.
   செல்வராஜ் புதன்கிழமை காலை 6 மணியளவில் ரயில்வே மைதானத்திலிருந்து ரயில்வே குடியிருப்பு சாலை வழியாக திமுக பிரமுகர்களான செந்தில், ஜெயப்பிரகாஷ், தரணி, கண்ணன், மணி ஆகியோருடன் நடைப்பயிற்சிக்காக சென்றார்.
   ரயில்வே குடியிருப்புப் பகுதியிலுள்ள தேவாலயம் அருகே வந்த போது, பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த 3 இளைஞர்கள், செல்வராஜ் அருகே வண்டியை நிறுத்தி வணக்கம் கூறினர். அப்போது, எதிர்சாலையிலிருந்து மோட்டார் சைக்கிளில் மேலும் இரு இளைஞர்கள் வந்து அவரை மறித்து வண்டியை நிறுத்தி விட்டு, செல்வராஜை சரமாரியாக அரிவாளால் வெட்டினர். தடுக்க முயன்ற திமுக பிரமுகர் ஜெயப்பிரகாஷும் வெட்டப்பட்டார்.
   செல்வராஜ் உயிரிழந்ததை உறுதி செய்த கும்பல், அங்கிருந்து தப்பிச் சென்றது.
   தகவலறிந்த விழுப்புரம் டிஎஸ்பி சுருளிராஜன், நகர காவல் ஆய்வாளர் சியாம்சுந்தர் தலைமையிலான போலீஸார் வந்து, உடலை மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
   விழுப்புரம் சரக டிஐஜி அனிசா உசேன், எஸ்.பி. நரேந்திரன் நாயர் ஆகியோர் நிகழ்விடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். தடயவியல் நிபுணர் சண்முகம் தடயங்களை சேகரித்தார்.
   திமுக மாவட்டச் செயலர் பொன்முடி, ராதாமணி எம்எல்ஏ, முன்னாள் எம்எல்ஏ புஷ்பராஜ், பொதுக்குழு உறுப்பினர் ஜனகராஜ், மாவட்ட துணைச் செயலர் ஜெயச்சந்திரன் உள்ளிட்டோர் மருத்துவமனைக்குச் சென்று செல்வராஜின் உடலை பார்வையிட்டனர்.
   இதையடுத்து, பொன்முடி உள்ளிட்டோர் விழுப்புரம் நகர காவல் நிலையத்துக்கு வந்து விரைந்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர்.
   செல்வராஜுடன் நடைப்பயிற்சிக்கு சென்ற தரணி (30) அளித்த புகாரின் பேரில், நகர போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். புதுவை, கடலூரைச் சேர்ந்த கூலிப்படை கும்பல், இந்த கொலையை செய்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
   கடைகள் அடைப்பு: இந்தச் சம்பவத்தையடுத்து, திமுக அலுவலகம் உள்ள கிழக்கு பாண்டி சாலை, நேருஜி சாலை, கேகே சாலை உள்ளிட்ட இடங்களில் கடைகள் அடைக்கப்பட்டன.
   ஏடிஎஸ்பி ராஜராஜன், டிஎஸ்பிக்கள் பாண்டியன், சுருளிராஜன் தலைமையில் நகரின் முக்கிய இடங்களில் போலீஸார் குவிக்கப்பட்டனர்.
   சாலை மறியல்: இதனிடையே, பகல் 12 மணி வரை முண்டியம்பாக்கம் மருத்துவமனையில் செல்வராஜின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்படாததைக் கண்டித்து, சென்னை-திருச்சி நெடுஞ்சாலையில் திமுகவினர் மறியலில் ஈடுபட்டனர். பொன்முடி நேரில் வந்து, மருத்துவர்களிடம் பேசியதையடுத்து, உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.
   இறந்த செல்வராஜுக்கு ஜெயபாரதி என்ற மனைவியும், மருத்துவ மாணவரான விக்னேஷ் என்ற மகனும் உள்ளனர்.
   முன்விரோதம் காரணமா? விழுப்புரம் விராட்டிக்குப்பம் பாதையைச் சேர்ந்த ரௌடி பத்தர்செல்வம், கடந்தாண்டு ஏப்.21-ஆம் தேதி நகராட்சி அலுவலகம் அருகே தலை துண்டிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார்.
   இதில், முக்கிய எதிரியான கீழ்ப்பெரும்பாக்கத்தைச் சேர்ந்த ரௌடி அறிவழகனுக்கு ஆதரவாக செல்வராஜ் செயல்பட்டதாக கூறப்பட்டது. இதனால், பத்தர்செல்வத்தின் ஆதரவாளர்கள் செல்வராஜை கொலை செய்திருக்கலாம் என்றும் அல்லது கீழ்ப்பெரும்பாக்கத்தைச் சேர்ந்த மறைந்த ரௌடி இருசப்பனின் ஆதரவாளர்களுக்கு தொடர்பிருக்கலாம் என்றும் போலீஸார் சந்தேகிக்கின்றனர்.
   இவை தவிர ரியல் எஸ்டேட் தொழிலில் ஏற்பட்ட முன்விரோதமும் காரணமாக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இதுகுறித்து தனிப்படை போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
   "குற்றவாளிகளை கைது செய்ய
   விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்'
   திமுக நகரச் செயலர் செல்வராஜ் கொலையில் தொடர்புடையவர்களை கண்டுபிடித்து விரைந்து கைது செய்ய போலீஸார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொன்முடி வலியுறுத்தினார்.
   விழுப்புரத்தில் வெட்டிக் கொலை செய்யப்பட்ட திமுக நகர செயலாளர் செல்வராஜின் உடலுக்கு திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, தலைமைக் கழக பேச்சாளர் பூச்சி முருகன், முன்னாள் அமைச்சர்கள் எ.வ.வேலு, பொன்முடி, எம்எல்ஏக்கள் ராதாமணி, உதயசூரியன், மஸ்தான், மாசிலாமணி, மாவட்டச் செயலர் அங்கையற்கண்ணி, ஜனகராஜ், புஷ்பராஜ், புகழேந்தி உள்ளிட்ட திமுகவினர் மற்றும் விழுப்புரத்தைச் சேர்ந்த காங்கிரஸ் மாவட்டத் தலைவர் குலாம்மொய்தீன், பாமக மாநில துணைப் பொதுச் செயலர் தங்கஜோதி, தேமுதிக மாவட்டச் செயலர் வெங்கடேசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் முன்னாள் எம்எல்ஏ ராமமூர்த்தி உள்ளிட்ட பலர் அஞ்சலி செலுத்தினர்.
   அப்போது, பொன்முடி செய்தியாளர்களிடம் கூறியது:
   செல்வராஜ் கொலைச் சம்பவம் குறித்து போலீஸார் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். திருச்சி ராமஜெயம் கொலை வழக்கு போல கிடப்பில் போட்டு விடாமல் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி, குற்றவாளிகள் கைது செய்ய வேண்டும் என்றார் அவர்.
   
   
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai