Enable Javscript for better performance
திண்டிவனம், உளுந்தூர்பேட்டை, சின்னசேலத்தில் ரயில் மறியல்- Dinamani

சுடச்சுட

    

    திண்டிவனம், உளுந்தூர்பேட்டை, சின்னசேலத்தில் ரயில் மறியல்

    By DIN  |   Published on : 17th September 2016 08:52 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    காவிரி பிரச்னையில் கர்நாடக அரசைக் கண்டித்து, விழுப்புரம் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை    திண்டிவனம், திருக்கோவிலூர், உளுந்தூர்பேட்டை, சின்னசேலம் உள்ளிட்ட பகுதிகளில் ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது.
    திண்டிவனத்தில் திமுக சார்பில் எம்.எல்.ஏ.க்கள் செஞ்சிமஸ்தான், மாசிலாமணி, சீத்தாபதி சொக்கலிங்கம் ஆகியோர் தலைமையில் திரண்ட அரசியல் கட்சியினர், பல்வேறு அமைப்புகளைச் நிர்வாகிகள் சுமார் 160 பேர் சென்னையில் இருந்து புதுச்சேரி சென்ற பயணிகள் ரயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    இவர்களை திண்டிவனம் ரயில்வே போலீஸார் மற்றும் திண்டிவனம் போலீஸார் கைது செய்து திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.
    விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்டச் செயலர் சேரன் தலைமையில் 200-க்கும் மேற்பட்ட அந்தக் கட்சியின் ரயில் நிலையத்துக்குச் சென்று, சென்னையில் இருந்து குருவாயூர் செல்லும் விரைவு ரயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர், அவர்களும் கைது செய்யப்பட்டனர்.
    செஞ்சியில்.. செஞ்சியில் மறியலில் ஈடுபட்ட திமுக நகரச் செயலர் காஜாநசீர் தலைமையில் அந்தக் கட்சியினர் 40 பேரும், பிஎஸ்என்எல் அலுவலகத்தை முற்றுகையிட்ட தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மாவட்டச் செயலர் ராஜேஷ் தலைமையில் அக்கட்சியினர் 20 பேரும் கைது செய்யப்பட்டனர்.
    இதேபோல, செஞ்சி நகர ஆட்டோ ஓட்டுநர் உரிமையாளர் சங்கத்தைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர் ஆட்டோக்களுடன் செஞ்சி மாதா கோயிலில் இருந்து  ஊர்வலமாக சென்றனர். இந்த ஊர்வலம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நிறைவுற்றது. பின்னர், அங்கிருந்து அவர்கள் கலைந்து சென்றனர். செஞ்சி டிஎஸ்பி. ரவிச்சந்திரன் தலைமையிலான போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
    உளுந்தூர்பேட்டையில்... உளுந்தூர்பேட்டையில் திமுக, மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 500-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
    விழுப்புரம் தெற்கு மாவட்ட திமுக சார்பில் நடைபெற்ற போராட்டத்துக்கு மாவட்டச் செயலர் அங்கையற்கண்ணி தலைமை வகித்தார். போராட்டத்தில் உதயசூரியன் எம்.எல்.ஏ., வசந்தம் கார்த்திகேயன், முன்னாள் எம்.எல்.ஏ., கே.திருநாவுக்கரசு, ஆ.ஜெ.மணிக்கண்ணன், உளுந்தூர்பேட்டை நகரச் செயலர் டேனியல்ராஜ் உள்ளிட்ட அக்கட்சியினர் 350-க்கும் மேற்பட்டோரும், மதிமுக சார்பில் மாவட்டச் செயலரும், பேரூராட்சித் தலைவருமான க.ஜெயசங்கர் தலைமையில் அக்கட்சியினர் 50-க்கும் மேற்பட்டோரும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் தொகுதிச் செயலர் செ.க.சேரன் தலைமையில் அக்கட்சியினர் 100-க்கும் மேற்பட்டோரும் மதுரையிலிருந்து விழுப்புரம் நோக்கிச் சென்ற பயணிகள் ரயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    உளுந்தூர்பேட்டை டி.எஸ்.பி ராதாகிருஷ்ணன் மேற்பார்வையில், திருநாவலூர் ஆய்வாளர் பி.ராஜேந்திரன் தலைமையில் அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார் ரயில் பாதையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்தனர். இதனால், பயணிகள் ரயில் 30 நிமிடம் கால தாமதமாகப் புறப்பட்டு சென்றது.
    அதேபோல, தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மாவட்டச் செயலர் ஞா.ராஜேஷ் தலைமையிலான அந்தக் கட்சியினர் 50-க்கும் மேற்பட்டோர் பி.எஸ்.என்.எல் அலுவலகம் முன் போராட்டத்தில் ஈடுபட்டனர். அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார் அவர்களைக் கைது செய்து, திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். அவர்கள் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.
    கள்ளக்குறிச்சியில்... கள்ளக்குறிச்சி வட்டத்திலும் அனைத்துக் கடைகள், ஆட்டோக்கள், தனியார் பேருந்துகள், காய்கறி அங்காடிகள், திரையரங்குகள் இயங்கவில்லை.
    அரசுப் பேருந்துகள், அரசுப் பள்ளிகள், அலுவலகங்கள் இயங்கின. தனியார் பள்ளிகளில் 10, 12-ஆம் வகுப்புகள் நடைபெற்றன.
    சின்னசேலத்தில் விவசாய சங்கத்தினர் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்த்த 85-க்கும் மேற்பட்டோர் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களைத் தடுத்து கைது செய்த போலீஸார், தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர்.
    பின்னர், அவர்கள் மாலையில் விடுவிக்கப்பட்டனர். திருக்கோவிலூரில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த விடுதலைச் செல்வன் தலைமையிலான அக்கட்சியினர் 94 பேர் மறியலில் ஈடுபட்டு கைதாகினர்.
    திருவெண்ணெய்நல்லூரில் விசிக மாவட்டச் செயலர் பாமரன் தலைமையில் ரயில் மறியலில் ஈடுபட்ட 55 பேர் கைது செய்யப்பட்டனர். மாவட்டம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்ட சுமார் 1,250-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு, பின்னர் அவர்கள் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai