சுடச்சுட

    

    விழுப்புரத்தில் 3 ஆயிரம் கடைகள் அடைப்பு: மறியலில் ஈடுபட்டவர்கள் கைதாகி விடுதலை

    By DIN  |   Published on : 17th September 2016 08:54 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    காவிரி பிரச்னை தொடர்பாக கர்நாடக மாநில அரசைக் கண்டித்தும், அங்குள்ள அரசியல் கட்சிகளைக் கண்டித்தும் தமிழகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற முழு அடைப்புப் போராட்டத்தால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
    விழுப்புரம் மாவட்டத்தில் விழுப்புரம், திண்டிவனம், செஞ்சி, உளுந்தூர்பேட்டை, கள்ளக்குறிச்சி, திருக்கோவிலூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கடையடைப்பு, ரயில் மறியல் போராட்டங்கள் நடைபெற்றன. மறியலில் ஈடுபட்ட சுமார் 1,250-க்கும் மேற்பட்டோர் கைதாகி விடுதலை செய்யப்பட்டனர்.
    மாவட்டத்தில் விழுப்புரம் உள்ளிட்ட அனைத்து முக்கிய நகரங்களிலும் சுமார் 40,000 கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. விழுப்புரத்தில் சுமார் 3,000 கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.
    கார், ஆட்டோ, தனியார் பேருந்துகள் இயக்கப்படவில்லை. பெட்ரோல் பங்க்குகளும் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை மூடப்பட்டிருந்தன. காய்கறிக் கடைகள், மளிகை, ஜவுளி உள்ளிட்ட கடைகளும் மூடப்பட்டதால், முக்கிய சாலைகள் ஆள் நடமாட்டமின்றி வெறிச்சோடிக் காணப்பட்டது.
    மருந்துக் கடைகள், மருத்துவமனைகள் மட்டுமே திறக்கப்பட்டிருந்தன. உணவகங்களும் மூடப்பட்டிருந்ததால் வெளியூர் பயணிகள் அவதிக்குள்ளாயினர்.
    தனியார் பள்ளிகள் விடுமுறை: தனியார் பள்ளிகள் மூடப்பட்ட நிலையில், அரசுப் பள்ளிகள் வழக்கம் போல் இயங்கின. எனினும், குறைந்த அளவிலான மாணவர்களே வருகை தந்திருந்தனர். திண்டிவனத்தில் சில தனியார் பள்ளிகள் இயங்கின.
    அரசுப் பேருந்துகள் இயக்கம்: அரசுப் பேருந்துகள் மட்டும் இயக்கப்பட்டன. எனினும், மக்கள் நடமாட்டமில்லாததால் குறைந்த பயணிகளுடன், நகர், புறநகர் பேருந்துகள் இயங்கின.
    விழுப்புரம் எஸ்.பி. நரேந்திரன் நாயர் தலைமையில் முக்கிய இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு கண்காணிக்கப்பட்டதால், அசம்பாவிதங்கள் தவிர்க்கப்பட்டது.
    விழுப்புரத்தில் சாலை மறியல்: விழுப்புரம் ஆட்சியர் அலுவலகம் எதிரே திமுக மாவட்டச் செயலர் பொன்முடி எம்.எல்.ஏ., தலைமையில் அரசியல் கட்சியினர் திரண்டனர். காங்கிரஸ் கட்சியின் மாவட்டத் தலைவர் குலாம்மொய்தீன், இந்திய கம்யூ. மாவட்டச் செயலர் ஏவி.சரவணன், மா.கம்யூ முன்னாள் எம்.எல்.ஏ., ராமமூர்த்தி, திமுக மாவட்டப் பொருளர் புகழேந்தி, துணைச் செயலர் ஜெயச்சந்திரன், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் புஷ்பராஜ், விஏடி கலிவரதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
    காவிரி நீர் பிரச்னையில் கர்நாடக அரசைக் கண்டித்தும், மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்தும் அவர்கள் குரல் எழுப்பியவாறு திருச்சி சாலை, நேருஜி சாலை வழியாக ஊர்வலமாகச் சென்றனர்.
    விழுப்புரம் பழைய பேருந்து நிலையம் அருகே வந்தபோது இவர்களை ஏடிஎஸ்பி ராஜராஜன் தலைமையிலான போலீஸார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.
    ரயில் மறியல்: விடுதலைச் சிறுத்தைகள் கட்சி பொதுச் செயலாளர் சிந்தனைச் செல்வன் தலைமையில், மாநில துணைப் பொதுச் செயலாளர் சேரலாதன், மாநில துணைச் செயலாளர் முகிலன், தொகுதி செயலாளர் தமிழ்மாறன், மாவட்ட செய்தித் தொடர்பாளர் தமிழேந்தி உள்ளிட்ட அந்தக் கட்சியினர் ஏராளமானோர் விழுப்புரம் ரயில் நிலையத்துக்குச் சென்று குருவாயூர்- சென்னை விரைவு ரயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    சிறிது நேரத்தில் போலீஸார் அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். மேலும், இதுதொடர்பாக 180 பேரை போலீஸார் கைது செய்து, தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்து மாலையில் விடுவித்தனர்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai