சுடச்சுட

    

    இடஒதுக்கீட்டுப் போராட்டத்தில் உயிரிழந்த தியாகிகளுக்கு ராமதாஸ், அன்புமணி அஞ்சலி

    By DIN  |   Published on : 18th September 2016 03:44 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    விழுப்புரம் மாவட்டத்தில், இடஒதுக்கீட்டுப் போராட்டத்தில் உயிரிழந்த தியாகிகளுக்கு, பாமக நிறுவனர் ராமதாஸ், அன்புமணி எம்.பி. ஆகியோர் சனிக்கிழமை அஞ்சலி செலுத்தினர்.
    தமிழகத்தில், இடஒதுக்கீடு கோரி வன்னியர் சங்கம் சார்பில் கடந்த 1987ஆம் ஆண்டு செப்.17-இல் நடைபெற்ற போராட்டத்தின்போது, துப்பாக்கிச் சூட்டில் 21 பேர் உயிரிழந்தனர்.
    அவர்கள் உயிரிழந்த பகுதிகளில் நினைவுத் தூண்கள் அமைக்கப்பட்டு, பாமக சார்பில் அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தலைமையில் ஆண்டுதோறும் நினைவு தினத்தன்று அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது.
    அதன்படி, திண்டிவனத்தில் உள்ள மாநில வன்னியர் சங்க அலுவலகத்தில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி சனிக்கிழமை காலை நடைபெற்றது.
    இதில் ராமதாஸ் தலைமை வகித்து, 21 பேரின் உருவப்படத்துக்கு மெழுகுவர்த்தி ஏற்றி, மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். கட்சியின் இளைஞரணித் தலைவர் அன்புமணி, தலைவர் கோ.க.மணி, வன்னியர் சங்கத் தலைவர் ஜெ.குரு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
    பின்னர், தியாகிகள் 21 பேரின் குடும்பத்தினருக்கு நலத்திட்ட உதவிகளை ராமதாஸ் வழங்கினார்.
    இதனையடுத்து, இளைஞரணித் தலைவர் அன்புமணி தலைமையில் திண்டிவனம் அருகே சித்தனி ஏழுமலை நினைவிடத்திலும், விக்கிரவாண்டி அருகே பாப்பனப்பட்டு ரங்கநாதன் நினைவிடம், பனையபுரத்தில் கயத்தூர் முனியன், முத்து, தாண்டவராயன் ஆகியோரது நினைவிடங்களிலும், விழுப்புரம் அருகே கோலியனூரில் கோவிந்தன், வேலு, ராஜேந்திரன் நினைவிடங்களிலும் அஞ்சலி செலுத்தப்பட்டது.
    மாநில இணைப் பொதுச் செயலர் இசக்கி, அமைப்புச் செயலர் செல்வக்குமார், வழக்குரைஞர் பாலு, முன்னாள் எம்பி தன்ராஜ், துணைப் பொதுச் செயலர் தங்க ஜோதி, மாநில துணைத் தலைவர் அன்புமணி, மாவட்டச் செயலர் பா.பழனிவேல், இளைஞர் சங்க செயலர்கள் சிவக்குமார், தன்ராஜ், புண்ணியக்கோடி, துணைச் செயலர்கள் மணிமாறன், சம்பத், துணைத் தலைவர்கள் ராமர், ஆறுமுகம், ஒன்றியச் செயலர்கள் ஞானவேல், ஸ்டாலின், சந்தோஷ், மணிகண்டன், ஏழுமலை, கிருஷ்ணமூர்த்தி, பார்த்திபன், மணிபால், ஜெயராஜ், மோகன், நகரச் செயலர் பெருமாள், சங்கர் உள்ளிட்ட பாமகவினர் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
    இந்நிகழ்வையொட்டி, விழுப்புரம் எஸ்பி நரேந்திரன் நாயர், வேலூர் எஸ்பி பகலவன், கடலூர் எஸ்பி விஜயகுமார் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai