சுடச்சுட

    

    புரட்டாசி மாதத்தையொட்டி பெருமாள் கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் தொடங்கியுள்ளன.
    கீழ்ப்பெரும்பாக்கம் வரதராஜபெருமாள் கோயிலில் புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையையொட்டி சுவாமிக்கு திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது.
    கீழ்ப்பெரும்பாக்கத்தில் பழைமை வாய்ந்த ஸ்ரீதேவி பூதேவி சமேத ஆனந்த வரதராஜபெருமாள் கோயில் உள்ளது. இக்கோயிலில் புரட்டாசி மாத வழிபாடு சனிக்கிழமை காலை தொடங்கியது.
    புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையையொட்டி, பெருமாள் மற்றும் ஸ்ரீதேவி, பூதேவி சுவாமிகளுக்கு திருமஞ்சனத்துடன், சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. திருக்கல்யாண உற்சவத்தில் திரளான பெண்கள் கலந்துகொண்டு, குளக்கரையில் உள்ள துர்க்கையம்மன் கோயிலில் இருந்து சீர்வரிசை கொண்டு வந்தனர்.
    இதனையடுத்து, சுவாமிக்கு திருக்கல்யாண உற்வசம் நடைபெற்றது. தொடர்ந்து, ஸ்ரீதேவி பூதேவி சமேத வரதராஜபெருமாள் சிறப்பு அலங்காரத்தில் கருட சேவையில் காட்சியளித்தார். இதில், திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமியை வழிபட்டனர்.
    திருக்கோவிலூரில்... திருக்கோவிலூர் ஸ்ரீத்ரி விக்ரம சுவாமி கோயிலில் புரட்டாசி மகோத்ஸவம் விழா சனிக்கிழமை தொடங்கியது.
    இவ்விழா தொடர்ந்து, 25 நாள்கள் நடைபெறுகிறது. மகோத்ஸவ விழாவையொட்டி தினமும் காலை 5.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 7 மணிக்கு திருப்பாவை சாற்றுமறை, 7.30 மணிக்கு உற்சவர் புறப்பாடு, கண்ணாடி அறைக்கு எழுந்தருளல், 8 மணிக்கு விசேஷ திருமஞ்சனம், 10.30 மணிக்கு திருக்கல்யாண உத்ஸவம் நடைபெறுகிறது.
    மாலை 4.30 மணிக்கு நித்யாநுஸந்தானம், 6 மணிக்கு ஊஞ்சல் சேவை, இரவு 7.30 மணிக்கு விசேஷ திருவாராதனம், நாலாயிர திவ்யபிரபந்தம், வேத பாராயணம், சேவை சாற்றுமறை, 8 மணிக்கு பெருமாள் ஆஸ்தானம் எழுந்தருளல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை உ.வே.நிவாஸ ராமாநுஜ ஆச்சாரியார் தலைமையில் கோயில் நிர்வாகத்தினர் செய்துள் வருகின்றனர்.
    உளுந்தூர்பேட்டையில்... பரிக்கல் லட்சுமி நரசிம்ம சுவாமி கோயிலில் புரட்டாசி மாத முதல் சனிக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
    திருநாவலூர் ஒன்றியம், பரிக்கல் கிராமத்தில் லட்சுமி நரசிம்மர் சுவாமி கோயில் உள்ளது. இது பரகலாசூரனை வென்று வசந்தராஜனுக்கு திருவருள் புரிந்த கோயிலாகும். இக்கோயில் கற்ப கிரகத்தில் உள்ள ஆஞ்சநேயர் சிலை வியாசர் முனிவரால் பிரதிஷ்டை செய்யப்பட்டதாக புராணங்கள் கூறுகின்றன. கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி மாதத்தில் சனிக்கிழமை தோறும் சிறப்பு வழிபாடு நடைபெறுவது வழக்கம். அந்த வகையில், இந்த ஆண்டு முதல் சனிக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
    முன்னதாக, லட்சுமி நரசிம்மருக்கு பால், பழம், இளநீர், நெய், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பொருள்களைக் கொண்டு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. இதனைத் தொடர்ந்து, திருப்பதி ஏழுமலையான் கோலத்தில் மூலவர் லட்சுமி நரம்மர் அலங்கரிக்கப்பட்டு காட்சியளித்தார். தொடர்ந்து, மகா தீபாராதனை நடைபெற்றது.
    இதில் உளுந்தூர்பேட்டை, விருத்தாசலம், விழுப்புரம், கடலூர், பண்ருட்டி உள்ளிட்ட பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு, லட்சுமி நரசிம்மரை வழிபட்டனர்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai