சுடச்சுட

    

    விழுப்புரம்- நாகப்பட்டினம் இடையே ரூ.3,300 கோடியில் நான்கு வழிச் சாலை: பொன்.ராதாகிருஷ்ணன் தகவல்

    By விழுப்புரம்,  |   Published on : 19th September 2016 09:44 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    விழுப்புரத்தில் இருந்து புதுச்சேரி வழியாக நாகப்பட்டினத்துக்கு ரூ.3,300 கோடி மதிப்பீட்டில் நான்கு வழிச்சாலை அமைக்கப்படும் என்று மத்திய நெடுஞ்சாலைகள் துறை இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.
     பாஜகவினருக்கு நடைபெற்ற பயிற்சி முகாமை பார்வையிட விழுப்புரத்துக்கு ஞாயிற்றுக்கிழமை வந்த அவர் செய்தியாளர்களிடம் கூறியது:
     மத்திய அரசின் தேசிய நெடுஞ்சாலைத் துறையின் மூலம், தமிழகத்தில் பல்வேறு திட்டங்கள் வேகமாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
     விழுப்புரத்தில் இருந்து புதுச்சேரி, கடலூர், காரைக்கால் வழியாக நாகப்பட்டினம் வரை மொத்தம் 185 கி.மீ. சாலை நான்கு வழிச் சாலையாக மாற்றப்படும். ரூ.3,300 கோடி மதிப்பீட்டில் மூன்று கட்டங்களாக இந்தப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. நிலம் கையகப்படுத்தும் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. விரைவில் பணிகள் தொடங்கப்படும்.
     இதேபோன்று, கிழக்குக் கடற்கரைச் சாலை, மதுரை சுற்றுச்சாலை போன்றவையும் நான்கு வழிச் சாலைகளாக மாற்றப்படும்.
     சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் விழுப்புரம்-திருக்கோவிலூர் சாலை சந்திக்கும் இடத்தில் விரைவில் அணுகுச் சாலை அமைக்கப்படும். திண்டிவனம்-கிருஷ்ணகிரி சாலைப் பணி பல ஆண்டுகளாக முடிக்கப்படாமல் இருப்பதற்கு காரணம் ஒப்பந்ததாரர்கள் பிரச்னை, மாவட்ட நிர்வாகத்தின் ஒத்துழைப்பு தேவைப்படுதல் போன்றவையாகும். இதனால், இந்த ஆண்டுக்குள் பணி நிறைவடையாது.
     சிறையில் பேரறிவாளன் தாக்கப்பட்டது, சிறையில் இருந்த ராம்குமார் உயிரிழந்திருப்பது ஆகிய சம்பவங்கள் சிறைத் துறைக்கு சவாலானவை. எனவே, தமிழகத்தில் சிறைத் துறையில் மேலும் கவனம் தேவை.
     காவிரி விவகாரத்தில், பிரதமர் நரேந்திர மோடி மிகச் சரியாக நடவடிக்கைகளை எடுத்துள்ளார்.
     காவிரியில் தமிழகத்துக்கு கிடைக்க வேண்டிய தண்ணீரை திறந்துவிட வேண்டியது கர்நாடகாவின் கடமை. காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக மத்திய அரசு உரிய நேரத்தில் அறிவிக்கும். கர்நாடகத்தில் பாஜக ஆட்சியில் இருந்த போது, தமிழக பாஜக தலைவராக இருந்த நான் தொலைபேசி மூலம் அங்கு பேசி தண்ணீரை திறந்துவிடச் செய்தேன்.
     அதேபோன்று, தற்போது காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்றுள்ள திருநாவுக்கரசர் கர்நாடகத்துக்கு கண்டனம் தெரிவிப்பதுடன், தொலைபேசியில் பேசி தண்ணீரைப் பெற்றுத்தர முயற்சிக்கலாம்.
     குற்றச்சம்பவங்கள் நாட்டின் பல்வேறு மாநிலங்களில் அதிகரித்து வருவதற்கு கல்வியில் நீதிபோதனைகள் இல்லாததும், மன அழுத்தமும் காரணமாகக் கூறப்படுகிறது. எனவே, கல்வி முறையில் மாற்றம் வேண்டும் என்றார் பொன்.ராதாகிருஷ்ணன்.
     
     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai