சுடச்சுட

    

    போலி ஏடிஎம் அட்டை வழக்கு: இலங்கை இளைஞரை காவலில் எடுத்து விசாரணை

    By விழுப்புரம்,  |   Published on : 20th September 2016 08:50 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    போலி ஏடிஎம் அட்டை வழக்கில் கைதான முக்கிய குற்றவாளிகளில் ஒருவராக கருதப்படும் இலங்கையைச் சேர்ந்த பிரசன்னாவை 2 நாள் காவலில் எடுத்து விசாரிக்க விழுப்புரம் நீதிமன்றம் திங்கள்கிழமை அனுமதியளித்தது.
     விழுப்புரம் மாவட்டத்தில் வங்கி ஏடிஎம் இயந்திரங்களில் ஸ்கிம்மர் கருவி பொருத்தி, நூதனமுறையில் வாடிக்கையாளர்களின் விவரங்களைச் சேகரித்து, போலி ஏடிஎம் அட்டைகள் தயாரித்து அதன் மூலம் பல கோடி ரூபாயை திருடிய மர்ம கும்பல் குறித்து, தேசியமயமாக்கப்பட்ட வங்கி மேலாளர் மற்றும் வாடிக்கையாளர்கள் விழுப்புரம் காவல் கண்காணிப்பாளரிடம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு புகார் அளித்தனர்.
     இது குறித்து, விழுப்புரம் மாவட்டக் குற்றப் பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்தனர். விசாரணையில் இதில், சர்வதேச கும்பலுக்குத் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. குற்றப் பிரிவு டி.எஸ்.பி. வீமராஜ் தலைமையில், தனிப் படைகள் அமைக்கப்பட்டு குற்றவாளிகளைத் தேடி வந்தனர்.
     இந்நிலையில் திண்டுக்கல்லைச் சேர்ந்த சரவணன், வீரமணி, சென்னை, வியாசர்பாடியைச் சேர்ந்த நூர்முகமது, கோவை, உக்கடத்தைச் சேர்ந்த ரசூல்மைதீன், செஞ்சியைச் சேர்ந்த ஜெயராமன் உள்ளிட்ட 14 பேரை தனிப்படை போலீஸார் கைது செய்தனர்.
     இவர்களிடமிருந்து, போலி ஏடிஎம் அட்டைகள், ஸ்கிம்மர் இயந்திரம், லேப்டாப்கள், செல்லிடப்பேசிகள், ஏடிஎம் அட்டை தயாரிக்கும் இயந்திரங்கள் மற்றும் லட்சக்கணக்கான பணத்தை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
     இந்தக் கும்பலுக்குத் தலைவனாக செயல்பட்ட கோவையைச் சேர்ந்த அப்துல் அஜீஸýக்கு (35) வலதுகரமாகச் செயல்பட்ட இலங்கை தெகில்வாலா பகுதியைச் சேர்ந்த விவேகானந்தன் மகன் பிரசன்னாவை (32) கடந்த 7-ஆம் தேதி பெங்களூரூ விமான நிலையத்தில் வைத்து, பெங்களூரூ போலீஸார் கைது செய்து, விழுப்புரம் தனிப்படை போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.
     தனிப்படை போலீஸார் பிரசன்னாவை விழுப்புரம் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சென்னை புழல் சிறையில் அடைத்தனர்.
     இந்நிலையில், பிரசன்னாவை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கேட்டு, குற்றப் பிரிவு போலீஸார் விழுப்புரம் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
     மனுவை திங்கள்கிழமை விசாரித்த நடுவர் நீதிமன்ற நீதிபதி மும்தாஜ், பிரசன்னாவை 2 நாள் காவலில் எடுத்து விசாரிக்க போலீஸாருக்கு அனுமதியளித்து உத்தரவிட்டார்.
     இதனையடுத்து, தனிப்படை போலீஸார் பிரசன்னாவை காவலில் எடுத்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
     
     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai