Enable Javscript for better performance
பாமக சார்பில் போட்டியிட இன்று முதல் விருப்ப மனு: அன்புமணி- Dinamani

சுடச்சுட

    

    பாமக சார்பில் போட்டியிட இன்று முதல் விருப்ப மனு: அன்புமணி

    By விழுப்புரம்,  |   Published on : 21st September 2016 10:05 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    உள்ளாட்சித் தேர்தலில் பாமக சார்பில் போட்டியிட விரும்புபவர்கள் புதன்கிழமை (செப்.21) முதல் விருப்ப மனு அளிக்கலாம் என்று கட்சியின் இளைஞரணித் தலைவர் அன்புமணி தெரிவித்தார்.
     விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகேயுள்ள தைலாபுரம் தோட்டத்தில், பாமக மாவட்டச் செயலர்கள் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
     கூட்டத்துக்கு கட்சியின் தலைவர் ஜி.கே.மணி தலைமை வகித்தார். நிறுவனர் ச.ராமதாஸ், இளைஞரணித் தலைவர் அன்புமணி எம்.பி. ஆகியோர் ஆலோசனை வழங்கிப் பேசினர். முன்னாள் மத்திய அமைச்சர் ஏ.கே. மூர்த்தி, வன்னியர் சங்கத் தலைவர் குரு உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
     பாமக சார்பில் வரும் உள்ளாட்சித் தேர்தலை எதிர்கொள்வது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
     கூட்டத்துக்குப் பிறகு அன்புமணி எம்.பி. செய்தியாளர்களிடம் கூறியது:
     உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக கட்சியினரின் விருப்ப மனுக்கள் புதன்கிழமை (செப். 21) தொடங்கி வருகிற 25-ஆம் தேதி வரை அந்தந்தப் பகுதி மாநில துணைப் பொதுச் செயலாளர் அலுவலகத்தில் பெறப்படும். இதன் பிறகு, குழுக்கள் அமைக்கப்பட்டு வேட்பாளர்கள் தேர்வு செய்யப்படுவர்.
     இந்தத் தேர்தலில், கடந்த 2001ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி உள்ள ஒதுக்கீட்டின் அடிப்படையில் உள்ளாட்சிப் பதவிகளுக்கான இடஒதுக்கீடு செய்யப்படும் என்று தெரிவித்துள்ளனர்.
     இதுதொடர்பாக, பாமக வழக்கு தொடர்ந்துள்ளது. உள்ளாட்சித் தேர்தலை உள்கட்சி தேர்தல் போல நடத்த அதிமுக அரசு முடிவெடுத்து, அதற்கான நடவடிக்கைகளை ரகசியமாக வைத்துள்ளனர். அதையும் மீறி நாங்கள் வெற்றி பெறுவோம். இந்தத் தேர்தலில் பாமக தனித்துப் போட்டியிடும்.
     காவிரி நீர் பிரச்னை தீர காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும். இதை மத்திய அரசு கூட்டாது. ஏனெனில், கர்நாடகத்தில் 2018ஆம் ஆண்டு நடைபெறவுள்ள பேரவைத் தேர்தல் அவர்களுக்கு முக்கியம். அவர்கள் அங்கு வென்றாலும், காவிரி நீரைத் தரமாட்டார்கள்.
     இதற்கான ஒரே வழி, தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் அனுபவம் வாய்ந்த மூத்த வழக்குரைஞரை நியமித்து வாதாடியே, மேலாண்மை வாரியம் அமைக்க உத்தரவைப் பெற வேண்டும்.
     கர்நாடகத்தில் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு மத்திய, மாநில அரசுகள் உரிய இழப்பீடு வழங்க வேண்டும்.
     அங்கு கலவரம் நடைபெற்ற பகுதிகளை மத்திய உள்துறை அமைச்சர் பார்வையிட்டு, ஆய்வு செய்ய வேண்டும். இந்த பிரச்னையை தீர்க்க தமிழக அரசு அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்ட வேண்டும் என்றார் அவர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai