சுடச்சுட

    

    சிபிஐ அதிகாரி எனக் கூறி ஓட்டுநரை ஏமாற்றி கார் கடத்தல்: இளைஞர் கைது

    By விழுப்புரம்,  |   Published on : 22nd September 2016 08:45 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சிபிஐ அதிகாரி எனக் கூறி, ஓட்டுநரை ஏமாற்றி வாடகை காரை கடத்திச் சென்ற இளைஞரை போலீஸார் மடக்கிப் பிடித்து கைது செய்தனர்.
     சென்னை கொரட்டூரைச் சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன் (40). வாடகை கார் நிறுவனம் நடத்தி வருகிறார். இவரது நிறுவனத்துக்கு செவ்வாய்க்கிழமை இரவு செல்லிடப்பேசியில் தொடர்பு கொண்ட நபர், தான் சிபிஐ அதிகாரி என்றும், கோவை செல்ல கார் அனுப்புமாறும் கேட்டுக்கொண்டார்.
     ஓட்டுநர் செந்தில்குமார் (41) மூலம் அங்குள்ள வாடகை சொகுசு காரை அனுப்பி வைத்தனர். அவர் அருகே உள்ள விடுதியிலிருந்து அந்த நபரை ஏற்றிக் கொண்டு புறப்பட்டார்.
     சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் விழுப்புரம் அருகே வந்த போது, போலீஸார் நிற்பதைப் பார்த்த அந்த நபர், டீசல் போட்டு விட்டுச் செல்லலாம் எனக் கூறி, நகருக்குள் காரை திருப்ப கூறியுள்ளார்.
     விழுப்புரம் புதிய பேருந்து நிலையப் பகுதிக்குச் சென்றதும், குடிநீர் பாட்டில் வாங்கி வருமாறு ஓட்டுநரை அந்த நபர் கேட்டுக்கொண்டார். ஓட்டுநர் கார் சாவியை எடுத்த போது, ஏ.சி.யை அணைக்க வேண்டாம்; சாவி இருக்கட்டும் என அந்த நபர் கூறினாராம்.
     கடைக்குச் சென்று விட்டு வந்த செந்தில்குமார் காரை காணாமல் அதிர்ச்சியடைந்தார். காரில் வந்த நபர் காரை கடத்திச் சென்றது தெரிய வந்தது.
     இதுகுறித்த புகாரின் பேரில், விழுப்புரம் போலீஸார் அனைத்து சோதனைச் சாவடிகளுக்கும் தகவல் தெரிவித்தனர்.
     விழுப்புரம் தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் செந்தில் விநாயகம், உதவி ஆய்வாளர் மருதப்பன் தலைமையிலான போலீஸார் தேடும் பணியில் ஈடுபட்டனர்.
     இந்த நிலையில், புதுவை அருகே ஆரோவில் சோதனைச் சாவடி பகுதியில் புதன்கிழமை அதிகாலை காரில் சென்ற அந்த நபரை போலீஸார் மடக்கிப் பிடித்தனர்.
     விழுப்புரம் போலீஸார் விரைந்து சென்று அந்த நபரை காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.
     இதில், அவர் சென்னை குரோம்பேட்டையைச் சேர்ந்த வெங்கட்ராமன் மகன் சங்கர் (30) என்பதும், பிசிஏ பட்டதாரியான அவர், போரூரில் உள்ள தனியார் மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றினார் என்பதும் தெரிய வந்தது.
     மேலும், கடன் தொல்லை காரணமாக காரை கடத்திச் சென்றுள்ளார். இவர் பெங்களூர் பகுதியில் காரை கடத்திச் சென்று விற்பனை செய்தவர் என்பதும் போலீஸாரின் விசாரணையில் தெரிய வந்தது.
     சங்கரை கைது செய்த போலீஸார் விழுப்புரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
     
     
     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai