சுடச்சுட

    

    மாவட்டத்தில் நிகழ்ந்த வெவ்வேறு விபத்துகளில் 2 இளைஞர்கள் உயிரிழந்தனர்.
     விழுப்புரம் அருகேயுள்ள சோழம்பூண்டி கிராமத்தைச் சேர்ந்த அய்யனார் மகன் மனோகர் (18). இவர், தனது நண்பர்கள் விக்கிரவாண்டி அருகேயுள்ள கோழிப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த இளையராஜா (28), ராமமூர்த்தி (22) ஆகியோருடன் புதன்கிழமை இரவு பைக்கில் விழுப்புரத்தில் இருந்து விக்கிரவாண்டி நோக்கிச் சென்றார்.
     விராட்டிக்குப்பம் பாதை கூட்டுச் சாலைப் பகுதியில் சென்றபோது, பின்னால் வந்த லாரி பைக் மீது மோதியது. இதில், மனோகர், இளையராஜா ஆகியோர் காயமடைந்தனர். தகவலறிந்து வந்த விழுப்புரம் தாலுகா போலீஸார், இருவரையும் மீட்டு முண்டியம்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துமனையில் சேர்த்தனர். அவர்களைப் பரிசோதித்த மருத்துவர்கள் மனோகர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இளையராஜா சிகிச்சைப் பெற்று வருகிறார். இது குறித்து விழுப்புரம் தாலுகா போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர்.
     மற்றொரு விபத்து: விழுப்புரம் அருகேயுள்ள கோலியனூர் கிழக்குத் தெருவைச் சேர்ந்த நாகராஜ் மகன் கமல்ராஜ் (20). தொழில்கல்வி படித்து வேலையில்லாமல் இருந்து வந்த இவர், புதன்கிழமை மாலை வீட்டிலிருந்து வெளியே சென்றார். அதன்பின்னர் வீடு திரும்பவில்லை. இதனால், சந்தேகமடைந்த அவரின் பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடியுள்ளனர்.
     இந்நிலையில், வியாழக்கிழமை காலை கோலினூர் ரயில்வே கடவுப்பாதை அருகே தண்டவாளத்தில் இளைஞரின் சடலம் கிடந்தது. இது குறித்து தகவலறிந்த விழுப்புரம் ரயில்வே போலீஸார் அங்கு சென்று விசாரித்தனர். விசாரணையில் உயிரிழந்தவர் கமல்ராஜ் என்பது தெரிய வந்தது. பின்னர், சடலத்தைக் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தண்டவாளத்தைக் கடக்க முயன்றபோது அவர், அடிப்பட்டு உயிரிழந்திருக்கலாம் என்று போலீஸார் தெரிவித்தனர். இது குறித்து விழுப்புரம் ரயில்வே போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர்.
     
     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai