சுடச்சுட

  

  உளுந்தூர்பேட்டை அருகே கூலித் தொழிலாளி பெட்ரோல் ஊற்றி எரித்துக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக, மனைவியின் காதலனை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.
  உளுந்தூர்பேட்டை அருகே ஆசனூரைச் சேர்ந்த காதர்கான் மகன் முஜிபுர் ரகுமான் (40). கூலித் தொழிலாளி. இவரது மனைவி முத்ரையர் (35). இவர்களுக்கு 3 பெண் குழந்தைகளும், ஒரு ஆண் குழந்தையும் உள்ளனர். முத்ரையர் தனியார் பள்ளி ஒன்றில் அலுவலக ஊழியராக வேலை செய்து வருகிறார். அதே பள்ளியில், சீயமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த செல்லப்பன் மகன் ராமமூர்த்தி ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார்.
  இந்த நிலையில், முத்ரையருக்கும் ராமமூர்த்திக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனை முஜிபுர் ரகுமான் கண்டித்ததால் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, கணவரைப் பிரிந்து முத்ரையர் ராமமூர்த்தியுடன் வசித்து வந்ததாகத் தெரிகிறது. முஜிபுர் ரகுமான், ராமமூர்த்தியின் வீட்டுக்கு பலமுறை சென்று மனைவியை தன்னுடன் அனுப்பி வைக்குமாறு கேட்டதாகத் தெரிகிறது.
  இந்த நிலையில் வெள்ளிக்கிழமை ராமமூர்த்தியின் வீட்டுக்குச் சென்று, தனது மனைவியை அனுப்பி வைக்குமாறு மீண்டும் கேட்டுள்ளார். இதில் ஏற்பட்ட தகராறின்போது முஜிபுர் ரகுமான் மீது ராமமூர்த்தி பெட்ரோலை ஊற்றித் தீ வைத்ததாகத் தெரிகிறது. இதில் காயமடைந்த அவர், உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
  பின்னர் தீவிர சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியிலேயே முஜிபுர் ரகுமான் உயிரிழந்தார். இது குறித்த புகாரின்பேரில் எலவனாசூர்கோட்டை போலீஸார் வழக்குப் பதிந்து, ராமமூர்த்தியை சனிக்கிழமை கைது செய்து, விசாரித்து வருகின்றனர்.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai