சுடச்சுட

  

  உளுந்தூர்பேட்டை அருகே கார் மோதி மூதாட்டி சாவு:  கிராம மக்கள் மறியல்

  By உளுந்தூர்பேட்டை  |   Published on : 27th September 2016 09:49 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  உளுந்தூர்பேட்டை அருகே சாலையோரம் நடந்து சென்ற மூதாட்டி திங்கள்கிழமை கார் மோதி உயிரிழந்தார். இதனால், ஆத்திரமடைந்த கிராமமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
   திருவெண்ணெய்நல்லூர் ஒன்றியம், இருவேல்பட்டு கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ரங்கநாதன் மனைவி பெரியநாயகி(70). இவர், இக்கிராமத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் திங்கள்கிழமை மாலை 6 மணியளவில் வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது விழுப்புரத்தில் இருந்து உளுந்தூர்பேட்டை நோக்கிச் சென்ற கார் பெரியநாயகி மீது மோதியது.
   இதில், பலத்த காயமடைந்த அவர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதையறிந்து ஆத்திரமடைந்த கிராம மக்கள், தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்த விழுப்புரம் (நிலம் பிரிவு) போலீஸ் டி.எஸ்.பி. சிவாஜி, திருநாவலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பி.ராஜேந்திரன் மற்றும் திருவெண்ணெய்நல்லூர் போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
   அப்போது பொதுமக்கள் தரப்பில், இந்தப் பகுதியில் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு, அதிகளவில் உயிரிழப்புகள் நிகழ்கின்றன. எனவே, விபத்துகளை தவிர்ப்பதற்கு சாலை தடுப்புக் கட்டைகள் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. இதையேற்ற போலீஸார், கோரிக்கையை அரசின் கவனத்துக்குக் கொண்டு செல்வதாக உறுதியளித்தனர். இதையடுத்து, பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.
   பின்னர், பெரியநாயகி சடலம் பிரேத பரிசோதனைக்கு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது.
   இந்த மறியலால், சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai