Enable Javscript for better performance
விழுப்புரம்-திருவெண்ணெய்நல்லூர் இரட்டை ரயில்பாதையில் 100 கி.மீ. வேகத்தில் என்ஜின் சோதனை ஓட்டம்- Dinamani

சுடச்சுட

    

    விழுப்புரம்-திருவெண்ணெய்நல்லூர் இரட்டை ரயில்பாதையில் 100 கி.மீ. வேகத்தில் என்ஜின் சோதனை ஓட்டம்

    By விழுப்புரம்,  |   Published on : 27th September 2016 09:59 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    விழுப்புரம்-திருவெண்ணெய்நல்லூர் இடையே அமைக்கப்பட்டு வரும் இரட்டை ரயில் பாதையில், 100 கி.மீ. வேகத்தில் ரயில் என்ஜினை இயக்கி அதிகாரிகள் திங்கள்கிழமை சோதனை மேற்கொண்டனர்.
     விழுப்புரம்-திண்டுக்கல் இடையே சுமார் ரூ.1,200 கோடி மதிப்பில் இரட்டை ரயில்பாதை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதில், விருத்தாசலம்-திருவெண்ணெய்நல்லூர் இடையே ரயில்பாதை அமைக்கும் பணி, கடந்த ஆண்டு நிறைவடைந்து ரயில் போக்குவரத்து நடைபெற்று வருகிறது.
     இதைத் தொடர்ந்து, விழுப்புரம்-திருவெண்ணெய்நல்லூர் இடையே பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. அதில், இரண்டு பெரிய ஆற்றுப்பாலங்கள் கட்டப்பட்டு, ரயில்பாதைகள் அமைக்கப்பட்டு, மின் கம்பங்கள் அமைக்கும் பணியும் நிறைவடைந்துள்ளது.
     விழுப்புரம்-திருவெண்ணெய்நல்லூர் இடையே பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளதால், அந்த பாதையில் 100-கி.மீ. வேகத்தில் ரயில் என்ஜின் இயக்கி திங்கள்கிழமை சோதனை நடத்தப்பட்டது.
     காலை 11.40 மணிக்கு விழுப்புரம் மேம்பாலம் அருகே தொடங்கி, திருவெண்ணெய்நல்லூர் ஆற்றுப்பாலம் வரை சுமார் 14 கி.மீ. தொலைவுக்கு இந்த சோதனை நடைபெற்றது.
     பின்னர், அங்கிருந்து மீண்டும் விழுப்புரத்துக்கு ரயில் என்ஜின் 100 கி.மீ. வேகத்தில் இயக்கப்பட்டது. அந்த என்ஜின் 10 நிமிடத்தில் விழுப்புரத்தை வந்தடைந்தது. இந்த ஆய்வின்போது, ரயில்பாதையில் உள்ள மின்கம்பிகள், மின்சாரத்தின் அளவு மற்றும் ரயில் பாதையின் உறுதித்தன்மை போன்றவை குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
     உயர்மின் அழுத்த இளநிலை பொறியாளர் கற்பூரசுந்தரபாண்டியன், என்ஜின் ஆய்வாளர் சுவாமிநாதன், ரயில் போக்குவரத்து ஆய்வாளர் உள்ளிட்ட ரயில்வே அதிகாரிகள் மற்றும் ஆர்.வி.என்.எல். தலைவர் மூர்த்தி, எல்.அன்.டி. திட்ட மேலாளர் ரோசாய், உதவி மேலாளர் சரவணன் உள்ளிட்ட அதிகாரிகள் இந்த ஆய்வில் ஈடுபட்டனர்.
     தொடர்ந்து, சில ஆய்வுகளுக்குப் பிறகு, இறுதியாக ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஆய்வு செய்து ஒப்புதல் கிடைத்த பிறகு, ரயில்பாதை பயன்பாட்டுக்கு வரும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai