சுடச்சுட

    

    இட ஒதுக்கீடு முறையில் குளறுபடி: திமுக புகார்

    By விழுப்புரம்,  |   Published on : 29th September 2016 09:40 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    உள்ளாட்சித் தேர்தல் இட ஒதுக்கீடு சுழற்சி முறையில் குளறுபடிகள் இருப்பதாக பொன்முடி எம்.எல்.ஏ., தலைமையிலான திமுக மற்றும் கூட்டணி கட்சியினர் ஆட்சியரிடம் புதன்கிழமை புகார் தெரிவித்தனர்.
     இது குறித்து அவர் அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது: மாவட்டத்தில் உள்ளாட்சித் தேர்தலில் இட ஒதுக்கீடு சுழற்சி முறையில் குளறுபடிகள் உள்ளன. இட ஒதுக்கீடு, மக்கள் தொகை அடிப்படையிலும், பஞ்சாயத்து ராஜ் சட்டத்தின்படியும் செய்யப்படவில்லை.
     கோலியனூர் ஒன்றியத்துக்கு உள்பட்ட அத்தியூர்திருவாதி ஊராட்சி ஆதிதிராவிட மகளிருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அந்த ஊராட்சியில் 1,133 வாக்காளர்கள் உள்ளனர்.
     அதில், ஆதிதிராவிடர்கள் 63 பேர் மட்டுமே உள்ளனர். இதில் பெண் வாக்காளர்கள் 33 பேர். ஆளும் கட்சியின் தூண்டுதல் பேரில் இந்த இட ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
     இதேபோல், வானூர் ஊராட்சி ஒன்றியத்தில், 9-ஆவது வார்டு பூத்துறை, பெரம்பை பகுதி ஒன்றியக்குழு உறுப்பினர் இடம் தொடர்ந்து 20 ஆண்டுகளாக ஆதிதிராவிடர்களுக்கே ஒதுக்கப்பட்டுள்ளது.
     பஞ்சாயத்து ராஜ் சட்டப்படி இட ஒதுக்கீடு சுழற்சி முறை இரண்டு தேர்தலுக்கு ஒருமுறை மாற்றப்பட வேண்டும். ஆனால், 5-ஆவது முறையாகவும் அதே நிலை அங்கு தொடர்கிறது.
     இப்படி மாவட்டம் முழுவதும் இட ஒதுக்கீடு சுழற்சி முறை சரியாகப் பின்பற்றப்படவில்லை. சுழற்சி முறையை, எதனடிப்படையில் செய்தார்கள் என்பதும் தெரியவில்லை.
     இந்த நடைமுறைகள் வெளிப்படையாக இருக்க வேண்டும் என்று அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. மனுவைப் பெற்றுக்கொண்ட ஆட்சியர், இது குறித்து ஆய்வு செய்து, தேர்தல் ஆணையத்துக்குப் பரிந்துரை செய்வதாகத் தெரிவித்தார்.
     காங்கிரஸ் மாவட்டத் தலைவர் குலாம்மொய்தீன், திமுக மாவட்டத் தலைவர் ராதாமணி, பொருளர் புகழேந்தி, துணைச் செயலர் ஜெயச்சந்திரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
     
     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai