Enable Javscript for better performance
மேல்மலையனூரில் தாற்காலிக பேருந்து நிலையங்களில் ஆட்சியர் ஆய்வு- Dinamani

சுடச்சுட

    

    மேல்மலையனூரில் தாற்காலிக பேருந்து நிலையங்களில் ஆட்சியர் ஆய்வு

    By செஞ்சி,  |   Published on : 29th September 2016 09:41 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மேல்மலையனூரில் தாற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள பேருந்து நிலையங்களை மாவட்ட ஆட்சியர் எல்.சுப்பிரமணியன் புதன்கிழமை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
     மேல்மலையனூரில் மாதந்தோறும் அமாவாசையை முன்னிட்டு, ஊஞ்சல் உற்சவம் நடைபெறுவது வழக்கம். இந்த உற்சவத்தில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் கர்நாடகம்,, புதுச்சேரி உள்ளிட்ட வேறு மாநிலங்களில் இருந்தும் சுமார் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொண்டு, அம்மனை வழிபட்டுச் செல்கின்றனர்.
     பக்தர்கள் தங்கள் வசதிக்கேற்ப வேன், கார், மினி லாரிகளில் வருகின்றனர்.
     மேலும், அரசுப் போக்குவரத்துக் கழகமும் சிறப்புப் பேருந்துகளை இயக்குகிறது.
     இவ்வாறு வரும் பக்தர்களின் வாகனங்களை நிறுத்துவதற்கு கோயில் வளாகத்தில் போதிய இடவசதி இல்லை. இதனைக் கருத்தில் கொண்டு, அதிக இடவசதியுள்ள இடங்களில் தாற்காலிகப் பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டு, அங்கு வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன.
     இதனால், பெருமளவில் போக்குவரத்து நெரிசல் தவிர்க்கப்பட்டு, பக்தர்கள் வசதியாகக் கோயிலுக்குச் சென்றுவர முடிகிறது. இந்தநிலையில் புரட்டாசி மாத அமாவாசையை முன்னிட்டு, தாற்காலிக பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இப் பேருந்து நிலையங்களில் குடிநீர் வசதி போன்ற அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளனவா என மாவட்ட ஆட்சியர் புதன்கிழமை பார்வையிட்டு ஆய்வு செய்து, அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.
     இதனைத் தொடர்ந்து, உதவி ஆணையர் அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
     கூட்டத்துக்கு தலைமை வகித்த ஆட்சியர், பக்தர்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் சம்பந்தப்பட்ட துறையினர் செய்து தருமாறும், வசதிகளில் குறைவு இல்லாமல் பார்த்துக் கொள்ளுமாறும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
     மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலர் மணி, உதவி இயக்குநர் ராமதாஸ், நேர்முக உதவியாளர் துரை, வருவாய் ஆய்வாளர் ராஜசேகரன், அறநிலையத் துறை இணை ஆணையர் வாசுதேவன், உதவி ஆணையர் பிரகாஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
     
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai