திருக்கோவிலூரில் செல்போன் கோபுரங்களில் பேட்டரி திருடிய 2 பேரை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.
உளுந்தூர்பேட்டை வட்டம், கரிவேப்பிலைப்பாளையத்தைச் சேர்ந்த அருணாச்சலம் மகன் ஆனந்தராஜ் (31). அரகண்டநல்லூரைச் சேர்ந்த மினி டெம்போ ஓட்டுநரான குணசேகரன் மகன் அன்பரசு (28). இவர்கள் இருவரும் திருக்கோவிலூர் பகுதியில் உள்ள செல்போன் கோபுரங்களில் பேட்டரிகளைத் திருடி வந்துள்ளனர்.
இந்த நிலையில், ஜி.அரியூரில் செல்போன் கோபுரத்தில் உள்ள பேட்டரிகள் திருடுபோனது. இதுகுறித்து, திருக்கோவிலூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
இதையடுத்து காவல் துணைக் கண்காணிப்பாளர் த.அசோக்குமார் உத்தரவின் பேரில், குற்றப் பிரிவு போலீஸார் அசோக்குமார், சிவஜோதி, திருப்பாலப்பந்தல் காவல் நிலைய உதவி ஆய்வாளர் கொளஞ்சிநாதன் ஆகியோர் விசாரித்து வந்தனர்.
இதனிடையே, மணம்பூண்டியில் உள்ள ஒரு கடையில், 24 பேட்டரிகளை விற்பனை செய்ய முயன்ற இருவர் போலீஸாரிடம் சிக்கினர்.
அவர்களிடம் நடத்திய விசாரணையில், திருப்பாலப்பந்தல், ஜி.அரியூர் உள்ளிட்ட பகுதிகளில் செல்போன் கோபுரங்களில் பேட்டரிகள் திருடியது தெரிய வந்தது.
மேலும், திருக்கோவிலூர் - என்ஜிஜிஓ நகரில், தனியார் செல்போன் கோபுர பகுதிகளில் 48 பேட்டரிகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததையும் போலீஸார் கண்டுபிடித்தனர்.
கைதானவர்களிடம் இருந்து 72 பேட்டரிகள், ஒரு மினி டெம்போ, ஒரு மோட்டார் சைக்கிளை போலீஸார் பறிமுதல் செய்தனர். இதன் மொத்த மதிப்பு ரூ. 15 லட்சம்.
இதையடுத்து கைதானவர்கள் 2 பேரையும் திருக்கோவிலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.
இவர்களை கைது செய்த குற்றப் பிரிவு போலீஸாரை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் பாராட்டினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.