புதுவையிலிருந்து சென்னை, கோவைக்கு மதுப் புட்டிகளைக் கடத்த முயன்றதாக 5 பேரை போலீஸார் கைது செய்தனர்.
விழுப்புரம் அருகேயுள்ள வளவனூர் பகுதியில் உள்ள கெங்கராம்பாளையம் மதுவிலக்குச் சோதனைச் சாவடியில் உதவி ஆய்வாளர் குமரன் தலைமையிலான போலீஸார் புதன்கிழமை மாலை வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, விழுப்புரம் நோக்கி வேகமாக வந்த காரை மடக்கி சோதனையிட்டனர்.
அதில், 41 பெட்டிகளில் 1,968 புதுச்சேரி மதுப் புட்டிகள் இருந்தது தெரிய வந்தது.
இதுதொடர்பாக காரில் இருந்த 3 பேரை பிடித்து போலீஸார் விசாரித்தனர்.
அவர்கள் 3 பேரும் கோயம்புத்தூர் அடுத்துள்ள கோபி, நீலமேடு பகுதியைச் சேர்ந்த பிரபாகரன் மகன் பிரவை கிருஷ்ணா (22), கோவை மேற்கு விநாயகர் தெருவைச் சேர்ந்த குப்புசாமி மகன் சசிக்குமார் (24), கோவை வேடப்பாடியைச் சேர்ந்த தன்ராஜ் (27) என்பதும், புதுச்சேரியிலிருந்து கோவைக்கு மதுப் புட்டிகளைக் கடத்திச் செல்ல முயன்றதும் தெரிய வந்தது.
அவர்களை 3 பேரையும் கைது செய்த போலீஸார், மதுப் புட்டிகள், காரை பறிமுதல் செய்து விழுப்புரம் மதுவிலக்குப் பிரிவு போலீஸில் ஒப்படைத்தனர்.
இதுகுறித்து மதுவிலக்குப் பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
சென்னைக்கு கடத்த முயற்சி: திண்டிவனம் அருகேயுள்ள ஒலக்கூரை அடுத்த கோனேரிக்குப்பம் பகுதியில் ஒலக்கூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் பாலு தலைமையிலான போலீஸார் புதன்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, சென்னை நோக்கி வந்த சொகுசு காரை மடக்கி சோதனையிட்டனர்.
அதில், 3 பெட்டிகளில் 144 மதுப் புட்டிகள், 8 பெட்டிகளில் 96 பீர் வகைகளும் இருந்தது தெரிய வந்தது. இதுதொடர்பாக காரில் இருந்த 2 பேரை பிடித்து போலீஸார் விசாரித்தனர்.
அவர்கள் புதுச்சேரி மாநிலம், நெல்லித்தோப்பைச் சேர்ந்த கர்ணன் மகன் குமார் (54), ராஜ் மனைவி திலகா (45) ஆகியோர் என்பதும், புதுச்சேரியிலிருந்து சென்னைக்கு மதுப் புட்டிகளைக் கடத்திச் செல்ல முயன்றதும் தெரிய வந்தது.
இதைத் தொடர்ந்து, அவர்கள் 2 பேரையும் கைது செய்து, மதுப் புட்டிகள் காரை பறிமுதல் செய்து, திண்டிவனம் மதுவிலக்குப் பிரிவு போலீஸில் ஒப்படைத்தனர். இதுகுறித்து அவர்கள் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.