விழுப்புரம் ரயில் நிலையத்தில் இருசக்கர வாகனங்கள் கடந்து செல்ல ஏற்பாடு

விழுப்புரம் ரயில் நிலையப் பகுதியில் இருந்த இரும்பு தடுப்புகளை அகற்றி, இருசக்கர வாகனங்கள் தண்டவாளத்தை கடந்து செல்ல புதன்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டது.
Updated on
1 min read

விழுப்புரம் ரயில் நிலையப் பகுதியில் இருந்த இரும்பு தடுப்புகளை அகற்றி, இருசக்கர வாகனங்கள் தண்டவாளத்தை கடந்து செல்ல புதன்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டது.
விழுப்புரம்-புதுச்சேரி சாலையில் உள்ள ரயில்வே மேம்பால சீரமைப்புப் பணி காரணமாக போக்குவரத்து நிறுத்தப்பட்டு, நகரின் இருபுறங்களில் உள்ள பொதுமக்கள் கடந்து செல்ல முடியாத நிலைய ஏற்பட்டது.
 நகரின் மற்றொரு பகுதியில் உள்ள கீழ்ப்பெரும்பாக்கம் சுரங்கப் பாதையை பயன்படுத்தி பொதுமக்கள், இருசக்கர வாகனங்கள், இலகுரக வாகனங்கள் சென்று வருகின்றன. ஆனால், ஆயிரக்கணக்கான வாகனங்கள் அந்த மாற்றுப் பாதையை பயன்படுத்துவதால், நாளுக்குநாள் வாகன நெரிசலில் பொதுமக்கள் தவித்து வருகின்றனர்.
இதனிடையே, விழுப்புரம் வி.மருதூர் பகுதியில் உள்ள டால்டா கம்பெனி அருகில் தண்டவாளத்தை கடக்க கடவுப்பாதை ஏற்படுத்தித் தர வேண்டும் என மாவட்ட நிர்வாகம் ரயில்வே நிர்வாகத்திடம் கேட்டுக்கொண்டது.  அதேபோல, இரா.லட்சுமணன் எம்.பி., ரயில்வே திருச்சி கோட்ட மேலாளரை சந்தித்து இதே கோரிக்கையை வலியுறுத்தி மனு அளித்தார்.
ஆனால், அந்த இடத்தில் கடவுப்பாதை அமைக்கவும், ரயில் தண்டவாளத்தை வாகனங்கள் கடந்து செல்லவும் ரயில்வே நிர்வாகம் இதுவரை அனுமதி வழங்கவில்லை.
இந்த நிலையில், புதன்கிழமை பள்ளிகள் திறக்கப்பட்டன. காலை 9 மணி அளவில் நகரின் இருபுறங்களிலும் உள்ள பள்ளிகளுக்கு மாணவர்கள் செல்ல வேண்டியிருந்தது. இதனால், விழுப்புரம் ரயில் நிலையத்தில் விநாயகர் கோயில் அருகே ரயில்வே தண்டவாளத்தை இருசக்கர வாகனங்கள் கடந்து செல்லக்கூடாது என்பதற்காக அமைக்கப்பட்டிருந்த தடுப்புகளை எஸ்.பி ஜெயக்குமார் உத்தரவின் பேரில் போலீஸார் அகற்றினர்.
 இதையடுத்து, புதன்கிழமை காலையிலிருந்து பொதுமக்களோடு, இருசக்கர வாகனங்களை வாகன ஓட்டிகள் தள்ளிக்கொண்டு தண்டவாளங்களை கடந்து செல்கின்றனர்.   இதனை, புதன்கிழமை காலை எஸ்.பி. ஜெயக்குமார் பார்வையிட்டார்.
தடுப்புகள் அகற்றப்பட்டு, இருசக்கர வாகனங்கள் கடந்து செல்வது குறித்து ரயில் நிலைய மேலாளர் ராஜன் கூறியதாவது: டிஎஸ்பி சங்கர் தலைமையிலான போலீஸார் செவ்வாய்க்கிழமை விநாயகர் கோயில் அருகே உள்ள தடுப்புகளை அகற்றவும், அந்த வழியே இருசக்கர வானங்கள் சென்று வரவும் அனுமதி கேட்டனர்.
ஆனால், அதற்கு அனுமதி அளிக்க முடியாது என்று கூறிவிட்டேன் என்றார்.
இதுகுறித்து மாவட்ட எஸ்.பி. ஜெயக்குமார் கூறியதாவது: நெடுஞ்சாலை துண்டிக்கப்பட்டதால், பொதுமக்கள் பெரிதும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். புதன்கிழமை பள்ளிகள் திறக்கப்பட்டால், மாற்றுப் பாதையில் கூட்டம் அதிகரிக்கும். அதனால், ரயில் நிலையத்தில் உள்ள பாதையை திறந்துவிட அனுமதி கேட்டோம். ஆனால், ரயில்வே தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து,  மாவட்ட ஆட்சியரிடம் கலந்து ஆலோசித்த பிறகு ரயில்வே இரும்புத் தடுப்புகளை அகற்றியுள்ளோம் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com