விழுப்புரம் மாவட்டத்தில் தொடர் வழிப்பறியில் ஈடுபட்டு வந்த சென்னை, கடலூரைச் சேர்ந்த மூவரை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.
விழுப்புரம் மாவட்டம், வளவனூர் அருகே கெங்கராம்பாளையம் சோதனைச் சாவடியில் காவல் ஆய்வாளர் முருகன், உதவி ஆய்வாளர்கள் ராஜசேகரன், பலராமன் தலைமையிலான போலீஸார் புதன்கிழமை காலை வாகனச் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, புதுச்சேரியிலிருந்து விழுப்புரம் நோக்கி வேகமாக வந்த பைக்கை நிறுத்தி சோதனையிட முயன்றனர்.
ஆனால், அந்த நபர்கள் பைக்கை கீழே போட்டுவிட்டு ஓட்டம் பிடித்தனர். அவர்களை போலீஸார் மடக்கிப் பிடித்து விசாரித்தனர்.
முன்னுக்கு பின் முரணாக பேசிய மூவரையும் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று போலீஸார் விசாரித்தனர். விசாரணையில், அவர்கள் சென்னை, வில்லிவாக்கத்தைச் சேர்ந்த ராஜு மகன் சரவணன் (24), பாடி, கலைவாணர் நகரைச் சேர்ந்த சங்கர் மகன் அன்பு (26), கடலூர் மாவட்டம், நெய்வேலி வடக்கு மேலூர் பகுதியைச் சேர்ந்த ராமலிங்கம் மகன் சத்தியமூர்த்தி (28) ஆகியோர் என்பதும், சென்னை-கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் கத்தியைக் காட்டி மிரட்டி, வழிப்பறிக் கொள்ளையில் ஈடுபட்டு வந்ததும் தெரிய வந்தது.
இவர்கள், செவ்வாய்க்கிழமை வளவனூர் அருகே கெங்கராம்பாளையம் பகுதியில் பைக்கில் சென்று கொண்டிருந்த குமார் என்பவரை வழிமறித்து கொலை செய்ய முயன்றதும், புதன்கிழமை காலை கோலியனூர் ரயில்வே கடவுப் பாதை அருகே பிரகஸ்பதி என்பவரிடம் தகராறு செய்து கொலை செய்ய முயன்றதும் தெரிய வந்தது.
இதுகுறித்தும் வழக்குப் பதிந்து போலீஸார் தேடி வந்தனர். இந்த நிலையில், மூவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
கொள்ளையர்களை மடக்கிப் பிடித்த போலீஸாரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் பாராட்டினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.