மூன்று மாதங்களுக்கு ஒரு முறை பொதுமக்கள் ரத்த தானம் செய்யலாம் என்று விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் இல.சுப்பிரமணியன் கூறினார்.
உலக ரத்த கொடையாளர் தினத்தையொட்டி, புதன்கிழமை விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்திலிருந்து விழிப்புணர்வுப் பேரணியை மாவட்ட ஆட்சியர் இல.சுப்பிரமணியன் தொடக்கி வைத்தார்.
பேரணி ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தொடங்கி திருச்சி சாலை, நான்குமுனைச் சாலை சந்திப்பில் நிறைவடைந்தது. மருத்துவம் மற்றும் செவிலிய மாணவ, மாணவிகள், தன்னார்வத் தொண்டு நிறுவனப் பணியாளர்கள், ரத்தக் கொடையாளர்கள் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து, இந்தாண்டு ரத்த தானம் வழங்கிய தன்னார்வலர்களான 22 ரத்த தான கொடையாளர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது.
அப்போது மாவட்ட ஆட்சியர் கூறியதாவது: 18 வயது முதல் 65 வயது வரை ரத்த தானம் செய்யலாம். ரத்த தானம் அளிப்பவர்களின் உடல் எடை குறைந்தது 45 கிலோ இருக்க வேண்டும். பரிசோதனை செய்த பிறகே ரத்தம் தானமாகப் பெறப்படும்.
ஒவ்வொருவருடைய உடலிலும் 5 லிட்டர் ரத்தம் உள்ளது. இதில் ரத்த தானத்தின் போது, 350 மில்லி லிட்டர் மட்டுமே பெறப்படும். இந்த ரத்தம் 24 மணி நேரத்துக்குள்ளாக மீண்டும் உடலில் உற்பத்தியாகிவிடும்.
மூன்று மாதங்களுக்கு ஒருமுறை தாராளமாக ரத்த தானம் செய்யலாம். ரத்த தானம் செய்ய 20 நிமிடங்களே ஆகும். தானம் செய்தவுடன் வழக்கம் போல் வேலைகளை மேற்கொள்ளலாம்.
அரசு ரத்த வங்கிகள், அரசு அனுமதி பெற்ற தனியார் ரத்த வங்கிகளில் மட்டுமே ரத்த தானம் செய்ய வேண்டும். ரத்த தான முகாம்களிலும் தானம் செய்யலாம் என்றார்.
மாவட்ட வருவாய் அலுவலர் பிரியா, சுகாதாரப்பணிகள் இணை இயக்குநர் பெர்லின் நோபல் ரூபவதி, துணை இயக்குநர்கள் சவுண்டம்மாள், ஜெமினி, சுதாகரன், மணிமேகலை, அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் வனிதாமணி, ரத்த வங்கி அலுவலர் ரவிசங்கர், நிலைய மருத்துவ அலுவலர் மணிவண்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.