பதவி உயர்வு வழங்கக் கோரி கால்நடை மருத்துவர்கள் பேரணி

பதவி உயர்வு வழங்கக் கோரி, விழுப்புரம் மாவட்டத்தில் கால்நடை மருத்துவர்கள் புதன்கிழமை தற்செயல் விடுப்பு எடுத்து,
Published on

பதவி உயர்வு வழங்கக் கோரி, விழுப்புரம் மாவட்டத்தில் கால்நடை மருத்துவர்கள் புதன்கிழமை தற்செயல் விடுப்பு எடுத்து, பேரணியாகச் சென்று மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
 கால்நடை பராமரிப்புத் துறையில் 25 முதல் 28 ஆண்டுகளாக பதவி உயர்வு பெறாமல் உள்ள கால்நடை உதவி மருத்துவர்கள், கால்நடை மருத்துவர்களுக்கு பதவி உயர்வு வழங்க வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் புதன்கிழமை கால்நடை மருத்துவர்கள் ஒருநாள் தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
 விழுப்புரம் மாவட்டத்தில் கால்நடை மருத்துவர்கள் 100-க்கும் மேற்பட்டோர் பணிக்கு செல்லாமல் தற்செயல் விடுப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
 மேலும், கோரிக்கையை வலியுறுத்தி இவர்கள் அனைவரும் விழுப்புரம் பழைய பேருந்து நிலையத்திலிருந்து புறப்பட்டு, நகரின் முக்கிய வீதிகள் வழியாக பேரணியாகச் சென்று புதிய பேருந்து நிலையம் அருகேயுள்ள நகராட்சித் திடலை அடைந்தனர்.
 தமிழ்நாடு கால்நடை உதவி மருத்துவர்கள் சங்க மாநிலத் தலைவர் பெரியசாமி, உதவி மருத்துவர் சங்க மாவட்ட செயலாளர் கந்தசாமி, மருத்துவ அலுவலர்கள் சங்க மாவட்ட செயலர் ராஜாசிதம்பரம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். தொடர்ந்து, அங்கு ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர். அதன் பின்னர் அவர்கள், மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து, கோரிக்கை மனுவை அளித்தனர்.
 பணிகள் பாதிப்பு: இந்தப் போராட்டம் காரணமாக கால்நடை மருத்துவமனை, மருந்தகங்களில் பணிகள் பாதிக்கப்பட்டன. அதுபோல, விவசாயிகளுக்கு வறட்சி நிவாரண வைக்கோல் வழங்கும் பணிகள், விலையில்லா ஆடு, மாடு வழங்கும் பணிகள், தீவனப்பயிர் வளர்ப்பு பணிகள், கால்நடை பாதுகாப்பு முகாம் உள்ளிட்ட பணிகளும் பாதிக்கப்பட்டதாக கால்நடை மருத்துவர்கள் தெரிவித்தனர்.
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com