அரகண்டநல்லூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில், விவசாயிகளுக்கு வியாபாரிகள் தர வேண்டிய நிலுவைத் தொகையை வழங்குவதற்கு, எடைப்பணித் தொழிலாளர்களிடம் மிரட்டி கட்டாய வசூலிப்பு நடைபெறுவதாகப் புகார் எழுந்துள்ளது.
திருக்கோவிலூர் அருகே உள்ள அரகண்டநல்லூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில், 65-க்கும் மேற்பட்டோர் வியாபாரிகளாகச் செயல்படுகின்றனர். கடந்த சில ஆண்டுகளில் விவசாயிகளுக்குக் கொடுக்க வேண்டிய பல லட்சம் ரூபாய் நிலுவைத் தொகையுடன் சில வியாபாரிகள் தலைமறைவாகி உள்ளனர்.
இதனைத்தொடர்ந்து, அண்மையில் உயிரிழந்த அரகண்டநல்லூரைச் சேர்ந்த வியாபாரி ஒருவரும், விவசாயிகளுக்கு ரூ.25 லட்சம் நிலுவைத் தொகையை வழங்கவில்லையாம்.
இதன் காரணமாக, இந்த விற்பனைக் கூட பொறுப்பு கண்காணிப்பாளர் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இந்த நிலையில், விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை, வியாபாரிகள் அனைவரும் சேர்ந்து செலுத்த முன்வந்துள்ளனர். மறுபுறம், உள்ளூர் வியாபாரிகள் சிலர் விற்பனைக்கூட எடைப்பணித் தொழிலாளர்களை மிரட்டி, தலா ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும் என நிர்ப்பந்தம் செய்துள்ளனர். இதனால், எடைப்பணித் தொழிலாளர்கள் 20-க்கும் மேற்பட்டோர் கேட்ட தொகையைக் கொடுத்துள்ளனர்.
50-க்கும் மேற்பட்டோர் வறுமையின் காரணமாக கொடுக்க வழியின்றித் தவிக்கின்றனர். உள்ளூர் வியாபாரிகள் இவர்களை பணியில் இருந்து நீக்குவதாக மிரட்டி வருகின்றனராம்.
இதுகுறித்து தமிழ்நாடு ஒழுங்குமுறை விற்பனைக் கூட எடைப்பணித் தொழிலாளர்கள் சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலர் ஏ.வி.சரவணன் கூறியதாவது: நெருக்கடியான தருணத்தில் விவசாயிகளுக்கு சேர வேண்டிய நிலுவைத் தொகையை வழங்க, சட்ட விதிகளுக்கு உள்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
இதைத் தவிர, தினக்கூலி அடிப்படையில் தாற்காலிகப் பணியாளர்களாகப் பணிபுரியும் எடைப்பணித் தொழிலாளர்களிடம் பெரிய தொகையை வசூலிப்பது, தொழிலாளர் நலச் சட்டங்களுக்கு எதிரானதாகும்.
ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில், விளைபொருள்களை கொள்முதல் செய்யும் வியாபாரிகளுக்கு சொத்து மதிப்பீட்டு அடிப்படையிலும், வங்கி வரவு-செலவுக் கணக்கு அடிப்படையிலும் உரிமம் வழங்குவதோடு, கொள்முதல் செய்யப்பட்ட விளைபொருளுக்கு உரிய பணத்தை அன்றைக்கே பட்டுவாடா செய்ய வேண்டும். தவறும்பட்சத்தில் உரிமத்தை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.