விவசாய நிலத்தில் வண்டல் மண் சேர்ப்பதால் ரசாயன உரப் பயன்பாடு குறையும்: ஆட்சியர்

விவசாய நிலத்தில் வண்டல் மண் சேர்ப்பதால் மண் வளம் பெற்று, ரசாயன உரப் பயன்பாடு குறையும் என்று மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தினார்.
Published on
Updated on
1 min read

விவசாய நிலத்தில் வண்டல் மண் சேர்ப்பதால் மண் வளம் பெற்று, ரசாயன உரப் பயன்பாடு குறையும் என்று மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தினார்.
 விழுப்புரம் மாவட்டத்தில், விவசாயிகள் பயன்பெறும் விதத்தில், நிலங்களை செம்மைப்படுத்த அருகாமையில் உள்ள ஏரிகள், அணைகளை தூர்வாரி வண்டல் மண்ணை இலவசமாக வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
 இதன்படி, நன்செய் நிலத்திற்கு ஏக்கருக்கு 25 டிராக்டர் லோடும், புன்செய் நிலத்திற்கு 30 டிராக்டர் லோடுகளும், வீட்டு பயன்பாட்டிற்கு 15 லோடுகளும், மண்பாண்டத் தொழிலாளர்களுக்கு 20 லோடுகளும் வண்டல், சவுடு
 மண்ணை எடுத்து பயன்படுத்திக் கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது.
 விழுப்புரம் அருகே உள்ள சோழாம்பூண்டி ஏரியில், இந்தத் திட்டத்தில் வண்டல் மண் எடுக்கும் பணியை, ஆட்சியர் இல.சுப்பிரமணியன் புதன்கிழமை நேரில் பார்வையிட்டு, விதிகள்படி உரிய விவசாயிக்கு வழங்கப்படுகிறதா என்று ஆய்வு செய்தார்.
 அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியது: மாவட்டத்தில், கோமுகி அணை, மணிமுக்தா அணை, விடூர் அணைகளிலும் மற்றும் 2015 ஏரிகளில் வண்டல் மண் எடுக்க அனுமதி வழங்கப்பட்டு பணிகள் தொடங்கியுள்ளன.
 ஏரியில் உள்ள வண்டல் மண்ணை எடுத்து நிலத்தில் சேர்ப்பதால், மண்ணின் வளம் அதிகரித்து, ரசாயன உரங்கள் பயன்பாடு குறையும். நிலங்களின் அங்ககச் சத்துகள் அதிகரிக்கும். நிலத்தின் காற்றோட்டம் அதிகரித்து, ஏரிகளில் நீர் பிடித்தல் அளவும் கணிசமாக உயரும்.
 வீட்டுத் தேவைக்கும் வண்டல் மண்ணை பயன்படுத்தலாம், செங்கல் சூளை போன்ற வியாபார நோக்கத்தில் தவறாக பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
 திட்ட இயக்குநர் மகேந்திரன், கனிம வளத்துறை உதவி இயக்குநர் பெருமாள் ராஜா, வேளாண்மைத் துறை இணை இயக்குநர் கார்த்திகேயன், வட்டாட்சியர் பத்மா உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com