பேரூராட்சிப் பகுதிகளில் தீயணைப்பு நிலையங்கள் தொடங்கப்படுமா?

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி, வளவனூர், கண்டமங்கலம், தியாகதுருகம் உள்ளிட்ட பேரூராட்சிப் பகுதிகளில் தீயணைப்பு நிலையங்கள் அமைக்க வேண்டும் என நீண்ட கால கோரிக்கை வலுத்து வருகிறது.
Updated on
2 min read

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி, வளவனூர், கண்டமங்கலம், தியாகதுருகம் உள்ளிட்ட பேரூராட்சிப் பகுதிகளில் தீயணைப்பு நிலையங்கள் அமைக்க வேண்டும் என நீண்ட கால கோரிக்கை வலுத்து வருகிறது.

தமிழகத்திலேயே 1,099 என்ற அதிக எண்ணிக்கையில் கிராமங்களைக் கொண்டுள்ள விழுப்புரம் மாவட்டத்தில் தீயணைப்பு, மீட்புப் பணிகளை மேற்கொள்ள விழுப்புரம், திண்டிவனம், உளுந்தூர்பேட்டை, கள்ளக்குறிச்சி, திருக்கோவிலூர், செஞ்சி, மேல்மலையனூர், மரக்காணம், வானூர், திருவெண்ணெய்நல்லூர், சின்னசேலம், சங்கராபுரம் ஆகிய 12 இடங்களில் தீயணைப்பு நிலையங்கள் தற்போது இயங்கி வருகின்றன.

வட்டங்களுக்கு ஒரு தீயணைப்பு நிலையம் என்ற அடிப்படையில், தற்போது பயன்பாட்டில் உள்ளன. இருப்பினும், அதிகளவில் கிராமங்கள், குடியிருப்புகள், நிறுவனங்கள் உள்ள பேரூராட்சி உள்ளிட்ட முக்கிய ஊர்களில் தீயணைப்பு நிலையம் அமையாததால், அப்பகுதி மக்கள் தீ விபத்துகளில் உடமைகளை இழப்பது தொடர்கிறது.

விக்கிரவாண்டி: குறிப்பாக, விழுப்புரம் அருகே உள்ள விக்கிரவாண்டி பேரூராட்சி பகுதியாகும். இது தனி வட்டமாக பிரிக்கப்பட்டு இயங்கி வருகிறது. நீண்டகாலமாக தனி சட்டப் பேரவைத் தொகுதியாகவும் உள்ளது.

இதனைச் சுற்றி பெரியதச்சூர், மயிலம், கூட்டேரிப்பட்டு, கஞ்சனூர் உள்ளிட்ட முக்கிய ஊர்களும், அதனைச் சுற்றி 50-க்கும் மேற்பட்ட கிராமங்களும் உள்ளன. தேசிய நெடுஞ்சாலைப் பகுதியாக உள்ளதால், தீயணைப்பு, விபத்து மீட்புப் பணிகள் அவசியமானதாக உள்ளது. இருப்பினும், இப்பகுதியில் தனி தீயணைப்பு நிலையம் அமைக்கப்படவில்லை. விக்கிரவாண்டி, பெரியதச்சூர், கூட்டேரிப்பட்டு உள்ளிட்டப்பகுதிகளுக்கு விழுப்புரம் தீயணைப்பு நிலையத்திலிருந்தே தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகளுக்கு செல்லும் நிலை 50 ஆண்டு காலமாக தொடர்கிறது.

விழுப்புரத்திலிருந்து 30 கி.மீ. தொலைவுக்கு செஞ்சி அருகே உள்ள கஞ்சனூர், கூட்டேரிப்பட்டு அருகே உள்ள பேரணி, பனையபுரம், வாக்கூர் வரை தீயணைப்பு மீட்புப் படையினர் செல்கின்றனர்.

அவசர கால தீ விபத்து, கிணற்றில் விழுந்தவர்களை மீட்பது, கரும்புத் தோட்டம் போன்றவற்றிற்கு நீண்ட தொலைவிலிருந்து வாகனம் வருவதற்குள் தீ தனது கோரத்தை முடித்து விடுகிறது. இதனால், பெரும் பொருளிழப்பும், உயிரிழப்புமே தொடர்கதையாக உள்ளன.

பெரியதச்சூர்: பெரியதச்சூர் பகுதியில் வங்கிகள், அரசுப் பள்ளி, கால்நடை மருந்தகம், காவல் நிலையம் உள்ளிட்ட வசதிகள் உள்ளன. இச்சுற்றுப்பகுதி கிராமங்களுக்கு தீயணைப்பு நிலையம் இல்லாததால், பெரும் விபத்துகள் நடந்து வருகிறது. கிராமங்கள் நிறைந்த பெரியதச்சூரில், தீயணைப்பு நிலையம் அமைக்க வேண்டும் என்று, அப்பகுதி இளைஞர் நல அமைப்பினர் சதீஷ்குமரன் தலைமையில் அண்மையில் ஆட்சியரிடம் கோரிக்கை வைத்தனர்.

வட்டத்துக்கு ஒரு தீயணைப்பு நிலையம் என்ற அடிப்படையில், விக்கிரவாண்டி தனி வட்டமாக உள்ளதால், விக்கிரவாண்டியிலோ அல்லது அருகாமையில் உள்ள பெரியதச்சூர் பகுதியிலோ தீயணைப்பு நிலையம் அமைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் நீண்டகாலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இதே போல், ஏராளமான கிராமங்கள் நிறைந்த தியாகதுருகம், வளவனூர் பேரூராட்சியிலும், அன்னியூர், கண்டமங்கலம் பகுதியிலும் தீயணைப்பு நிலையம் அமைக்க வேண்டும் என்று நீண்டகால கோரிக்கைகள் தொடர்ந்து வருகிறது.

இது குறித்து, மாவட்ட தீயணைப்பு அதிகாரி கணேசன் கூறியதாவது: விக்கிரவாண்டி, அன்னியூர், ரிஷிவந்தியம், தியாகதுருகம், வளவனூர், கண்டமங்கலம் உள்ளிட்டப் பகுதிகளுக்கு தீயணைப்பு நிலையம் வேண்டும் என்று மக்களின் கோரிக்கைகள் ஏற்கெனவே பரிந்துரைக்கப்பட்டுள்ளன.

நீண்ட தொலைவில் அமைந்துள்ளதால், அப்பகுதியில் தீத் தடுப்பு அழைப்புகள், கோயில் விழாக்கள், விபத்துகள் நிலவரங்களை தெரிவித்து, அரசுக்கு புள்ளி விவரங்களை தெரிவித்து, பரிந்துரைத்து அனுப்பியுள்ளோம். முதல்வர் தான் அனுமதித்து அறிவிக்க வேண்டும். இந்த இடங்களில் புதிய தீயணைப்பு நிலையங்கள் வந்தால், தீத் தடுப்பு, மீட்பு பணிகள் விரைவுபெறும். வேலைப்பளுவும் குறையும் என்றார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com