எரிசாராயம் கடத்திய வாகனத்தை துரத்திப் பிடித்த வட்டாட்சியர்!
உளுந்தூர்பேட்டை அருகே எரிசாராயம் கடத்திச் சென்ற வாகனத்தை வட்டாட்சியர் திங்கள்கிழமை காரில் துரத்திப் பிடித்தார். அதிலிருந்த 1,200 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டதுடன், 2 இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர்.
விழுப்புரம் மாவட்டம், உளுந்தூர்பேட்டை வட்டாட்சியர் இளங்கோவன். இவர், அரசு அலுவல் சம்பந்தமாக திங்கள்கிழமை விழுப்புரம் வந்தார். பணிகள் முடிந்து பிற்பகல் 2.30 மணியளவில் உளுந்தூர்பேட்டைக்கு அரசு வாகனத்தில் புறப்பட்டுச் சென்றுக்கொண்டிருந்தார். சென்னை - திருச்சி நெடுஞ்சாலையில் திருநாவலூர் அருகே வண்டிபாளையம் என்ற இடத்தில் சென்றபோது, பின்னால் வந்த சரக்கு வாகனம், வட்டாட்சியர் சென்ற காரின் மீது மோதுவது போல வந்துள்ளது. அப்போது, வட்டாட்சியரின் கார் ஓட்டுநர் உடனடியாக சுதாரித்துக்கொண்டு காரை லாவகமாக வளைத்து மோதல் சம்பவத்தை தவிர்த்தார். ஆனால், பின்னால் தொடர்ந்து வந்த சரக்கு வாகனம் மீண்டும் மோதுவது போல வந்து கடந்து சென்றதாம்.
இதனால் சந்தேகமடைந்த வட்டாட்சியர், அதிவேகமாக சென்ற அந்த வாகனத்தை மடக்கிப் பிடிக்க கார் ஓட்டுநருக்கு உத்தரவிட்டார். ஆனால் அந்த சரக்கு வாகனம் உளுந்தூர்பேட்டை நோக்கிச் சென்றுகொண்டிருந்தது. இது குறித்து உளுந்தூர்பேட்டை போலீஸாருக்கு வட்டாட்சியர் தகவல் அளித்தார். அந்த சரக்கு வாகனம் உளுந்தூர்பேட்டை நகருக்குள் செல்லாமல், புறவழிச் சாலை வழியாகச் சென்றுகொண்டிருந்தது. இதையடுத்து, அந்த எல்லைக்குள்பட்ட எடைக்கல் காவல் நிலையத்துக்கு வட்டாட்சியர் தகவல் அளித்தார். இதையடுத்து, எடைக்கல் உதவி ஆய்வாளர் அகிலன் தலைமையிலான போலீஸார், அந்த வாகனத்தைப் பிடிக்க எதிர்புறமாக இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தனர்.
காவல் துறையினரும், வருவாய்த் துறையினரும் அந்த வாகனத்தை சுற்றி வளைக்க முயன்றனர். அப்போது, உளுந்தூர்பேட்டையை அடுத்த பாலி என்ற இடத்தில் தமிழ்நாடு சிறப்பு காவல் படை வளாகம் அருகே அந்த வாகனத்தை நிறுத்திவிட்டு அதிலிருந்த 2 பேர் ஓட்டம் பிடித்தனர். அங்குவந்த வட்டாட்சியர் அந்த வாகனத்தை சோதனையிட்டதில் 34 கேன்களில் ரூ.1.50 லட்சம் மதிப்புள்ள 1,190 லிட்டர் எரி சாராயம் இருந்தது தெரிய வந்தது.
இதனிடையே, சரக்கு வாகனத்தை நிறுத்திவிட்டு தப்பியோடிய 2 பேரையும் போலீஸார் மடக்கிப் பிடித்தனர். விசாரணையில் அவர்கள் புதுவை, நெட்டப்பாக்கத்தைச் சேர்ந்த மனோகர் மகன் சங்கர் (24), மடுகரையைச் சேர்ந்த ரவி மகன் விவேக் (24) ஆகியோர் எனத் தெரியவந்தது. இவர்கள் மடுகரை பகுதியிலிருந்து உளுந்தூர்பேட்டைக்கு எரிசாராயத்தை கடத்திச் செல்ல முயன்றதும் தெரிய வந்தது.
இதையடுத்து, எரிசாராயம், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட சரக்கு வாகனம் ஆகியவற்றை போலீஸார் பறிமுதல் செய்து, உளுந்தூர்பேட்டை மது விலக்கு பிரிவில் ஒப்படைத்தனர். இது தொடர்பாக, மது விலக்கு போலீஸார் வழக்குப் பதிந்து சங்கர், விவேக் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.