விழுப்புரத்தில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர் கூட்டத்தில் 496 மனுக்கள் பெறப்பட்டன.
விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வாராந்திர பொதுமக்கள் குறைதீர் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் இல.சுப்பிரமணியன் தலைமை வகித்து பொது மக்களிடமிருந்து மனுக்களைப் பெற்றார்.
மானிய விலையில் வேளாண் இயந்திரங்கள், முதியோர் ஓய்வூதியத் தொகை, கல்விக் கடன், வீட்டுமனைப் பட்டா, பசுமை வீடுகள், திருமண உதவித்தொகை, குடும்ப அட்டை, பட்டா மாற்றம், ஆக்கிரமிப்புகள் அகற்றம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 496 மனுக்கள் வரப்பெற்றன.
மனுக்களை மாவட்ட ஆட்சியர், பரிந்துரைத்து மேல் நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு வழங்கினார்.
கூட்டத்தில் தொடர்ந்து, முதலமைச்சரின் பொது நிவாரண நிதி உதவித் திட்டத்தின் கிழ் இறப்பு நிவாரண நிதியுதவியாக உளுந்தூர்பேட்டை வட்டம், தங்சாமி குடும்பத்தினருக்கு ரூ.50 ஆயிரமும், மேல்மலையனூர் வட்டம் சிவலிங்கம் மனைவி குமாரி குடும்பத்துக்கு ரூ.2 லட்சமும் வழங்கப்பட்டது. மாவட்ட வருவாய் அலுவலர் ஆர்.பிரியா, தனித் துணை ஆட்சியர் சாந்தி, பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் ராம்சந்தர், ஆட்சியரின் நேர்முக உதவியாளர் மஞ்சுளா, மாவட்ட வழங்கல் அலுவலர் ராஜேந்திரன் உள்ளிட்ட அலுவலர்கள், பொது மக்கள் கலந்துகொண்டனர்.