சின்னசேலம் அருகே இரு தரப்பு மோதலில் கைது செய்யப்பட்ட தலித் இளைஞர்களை விடுவிக்கக் கோரி கிராம மக்கள் திங்கள்கிழமை எஸ்.பி. ஜெயக்குமாரிடம் மனு அளித்தனர்.
விழுப்புரம் மாவட்டம், சின்னசேலம் அருகே கீழ்க்குப்பத்தை அடுத்த தென்சிறுவளூர் கிராமத்தைச் சேர்ந்த தலித் பிரிவினருக்கும், அருகே உள்ள நாட்டார்மங்கலம் கிராமத்தைச் சேர்ந்த பிற சாதியினருக்கும் இடையே கடந்த 3-ஆம் தேதி தகராறு ஏற்பட்டது.
இது, இரு தரப்புக்கும் இடையே மோதலாக மாறியது. இதுதொடர்பாக கீழ்க்குப்பம் போலீஸார் இரு தரப்பினர் மீதும் வழக்குப் பதிவு செய்து, தென்சிறுவளூரைச் சேர்ந்த 20 பேரையும், நாட்டார்மங்கலத்தைச் சேர்ந்த 5 பேரையும் கைது செய்தனர்.
இந்த நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த விழுப்புரம் தெற்கு மாவட்டச் செயலர் ஏழுமலை தலைமையில், தென்சிறுவளூர் கிராமத்தைச் சேர்ந்த பெண்கள் உள்பட 40-க்கும் மேற்பட்டோர் திங்கள்கிழமை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு அளிக்க திரண்டு வந்தனர். இதையடுத்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் அவர்களிடம் விசாரித்தார்.
அப்போது, இரு தரப்பு மோதலில் தலித் தரப்பைச் சேர்ந்த இளைஞர்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் உள்பட 20 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். அவர்களை விடுவிக்க வேண்டும். தலித் மக்களை அவதூறாகப் பேசி, தாக்கிய போலீஸார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.
இதுகுறித்து முறையாக இரு தரப்பினர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, விசாரணை நடைபெற்று வருகிறது. இதில், பாரபட்சமாக நடக்க ஏதுவும் இல்லை. முறையாக விசாரணை நடத்தப்படும். தங்கள் தரப்பு புகாரை மனுவாக அளித்தால், விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என எஸ்.பி. ஜெயக்குமார் தெரிவித்தார். இதையடுத்து, பொதுமக்கள் தாங்கள் கொண்டு வந்த மனுக்களை எஸ்.பி. ஜெயக்குமாரிடம் அளித்துவிட்டுச் சென்றனர்.