திருக்கோவிலூர் அருகே முகையூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நிலையான வளர்ச்சி இலக்கீடுகள் முகாம் திங்கள்கிழமை தொடங்கியது. தொடர்ந்து 8 நாள்களுக்கு 8 தொகுப்புகளாக நடைபெறுகிறது.
இந்த முகாமுக்கு உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) ச.சீனுவாசன் தலைமை வகித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஏ.கே.தாமோதரன், கி.நாராயணசாமி, துணை வட்டார வளர்ச்சி அலுவலர் (நிர்வாகம்) எஸ்.பழனிவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். துணை வட்டார வளர்ச்சி அலுவலர் (ஊராட்சி) சி.ஆர்.சிவநேசன் வரவேற்றார்.
முகாமில் மாநில ஊரக வளர்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன முதன்மைப் பயிற்றுநர் மு.ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு, கிராம வளர்ச்சியில் நீடித்த, நிலைத்த வளர்ச்சிகளான வறுமை ஒழிப்பு, கண்ணியமான வேலைவாய்ப்பு உள்ளிட்ட நிலையான வளர்ச்சி பற்றி 10 இலக்கீடுகள் குறித்து பயிற்சி அளித்தார்.
முகாமில் ஆதிச்சனூர், ஆடூர்.கொளப்பாக்கம், அடுக்கம், ஆலம்பாடி, அந்திலி, ஆர்காடு, அருளவாடி ஆகிய ஊராட்சிகளுக்கு உள்பட்ட களப் பணியாளர்களான பள்ளித் தலைமை ஆசிரியர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், கிராம சுகாதாரச் செவிலியர்கள், அங்கன்வாடி மையப் பணியாளர்கள், ஊராட்சிச் செயலர்கள் கலந்து கொண்டனர்.
இரண்டாம் தொகுப்பாக, செவ்வாய்க்கிழமை (ஆக. 7) அருமலை, அருணாபுரம், அத்திப்பாக்கம், அத்தியந்தல், ஆயந்தூர், சித்தப்பட்டிணம், டி.தேவனூர், தேவரடியார்குப்பம் ஆகிய ஊராட்சிகளின் களப் பணியாளர்களுக்கான பயிற்சி முகாம் நடைபெறுகிறது.