விழுப்புரம் மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு நலப்பணிகளை மேற்கொண்டு வரும் தொண்டு நிறுவனங்கள், தனிநபர்கள் தேசிய விருது பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
மாற்றுத் திறனாளிகள் நலனுக்கென சிறப்பான வகையில் பணிகளை மேற்கொண்டு வரும் தனி நபர்கள், தொண்டு நிறுவனங்கள் மற்றும் பல வகைகளில் சிறப்பான திறமைகளை
வெளிக்கொணரும் மாற்றுத் திறனாளிகள் ஆகியோரை ஊக்கப்படுத்தும் விதமாக, மத்திய அரசால் ஆண்டுதோறும் தேசிய விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.
2018-ஆம் ஆண்டுக்கான தேசிய விருதுகள் மாற்றுத் திறனாளிகள் உரிமைகள் நலச் சட்டம் 2016-இல் வரையறுக்கப்பட்டுள்ள மாற்றுத் திறனாளிகள் வகைகளுக்கேற்ப பல்வேறு பிரிவுகளில் வழங்கப்பட உள்ளன.
சிறப்பாகப் பணிபுரியும் மாற்றுத் திறனாளி, சுயதொழில் புரிவோர், சிறந்த பணியமர்த்தும் அலுவலர் மற்றும் சிறந்த நிறுவனம், மாற்றுத் திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக சேவை புரிந்த தனிநபர், நிறுவனம், மாற்றுத் திறனாளிகளில் முன்மாதிரியாக திகழ்பவர்கள், மாற்றுத் திறனாளிகளின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் வகையில் சிறந்த செயல்முறை ஆராய்ச்சிப் பணி, தொழில்நுட்பம் அல்லது கண்டுபிடிப்பு, மாற்றுத் திறனுடையோரின் தடையற்ற சூழலுக்கான உள்கட்டமைப்புகளை ஏற்படுத்திய சிறந்த பணிக்காக, மாற்றுத் திறனாளிகள் திட்டங்கள், மறுவாழ்வு பணிகளை சிறப்பாக மேற்கொண்ட நிறுவனங்கள், சிறந்த படைப்பாற்றல் திறனுடைய மாற்றுத் திறனாளி குழந்தைகள், மாற்றுத் திறனாளிகளின் அதிகார பகிர்வை ஊக்கப்படுத்தும் சிறந்த மாநிலம் உள்ளிட்ட 14 பிரிவுகளில் தேசிய விருதுகள் வழங்கப்பட உள்ளன.
இதற்காக, விண்ணப்பிக்க விரும்புவோர் www.disablityaffairs.gov.in என்ற இணையதள முகவரியில் விவரங்களை தெரிந்துகொண்டு, விண்ணப்பப் படிவத்தை இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். அல்லது மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகத்திலும் பெறலாம்.
விண்ணப்பங்களை அனைத்து இணைப்புகளுடன் வருகிற 8-ஆம் தேதிக்குள் 2 நகல்களுடன் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர், விழுப்புரம், என்ற முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு அதில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.