அரசு வேலை வழங்க வலியுறுத்தி, விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பட்டதாரி மாற்றுத் திறனாளி வாயில் கருப்புத் துணி கட்டி திங்கள்கிழமை நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டார்.
விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறைதீர் நாள் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, செஞ்சி அருகேயுள்ள கம்மந்தூரைச் சேர்ந்த பொன்னுசாமி (34) என்ற மாற்றுத் திறனாளி, கோரிக்கை மனுவுடன் ஆட்சியர் அலுவலகம் வந்தார். அலுவலக வாயில் பகுதியில், ஆட்சியரின் காருக்கு முன்னால் அமர்ந்து, வாயில் கருப்புத் துணி கட்டிக் கொண்டு திடீர் போராட்டத்தில் ஈடுபட்டார்.
அவரது போராட்டத்தை அங்கு பாதுகாப்புப் பணியிலிருந்த விழுப்புரம் தாலுகா உதவி ஆய்வாளர் சரஸ்வதி மற்றும் போலீஸார் தடுத்து நிறுத்தி விசாரித்தனர். அப்போது அவர் கூறியதாவது:
பட்டதாரி மாற்றுத் திறனாளியான நான், விவசாய கூலித் தொழிலாளியான எனது தந்தையுடன் வறுமையான சூழலில் வாழ்ந்து வருகிறேன். நான் கடந்த 2016-ஆம் ஆண்டு எங்கள் பகுதி ஊராட்சி உதவியாளர் பணிக்காக செஞ்சி வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நேர்முகத் தேர்வில் பங்கேற்றேன். பின்னர், கல்விச் சான்றிதழ் உள்ளிட்ட அனைத்து ஆவணங்களை சமர்ப்பித்தும், உரிய தகுதிகள் இருந்தும் எனக்கு வேலை வழங்கப்படவில்லை. இதற்கு மாறாக, அதிகாரிகள் ரூ.3 லட்சம் லஞ்சம் வாங்கிக்கொண்டு, அந்தப் பணியை தகுதியில்லாத வேறு ஒருவருக்கு வழங்கிவிட்டனர்.
இதே போல, கடந்தாண்டு நடைபெற்ற ஊராட்சி உதவியாளர் பணிக்கான நேர்முகத் தேர்வில் கலந்து கொண்டேன். அதிலும் தேர்வு செய்யாமல் முறைகேடாக பணி நியமனம் வழங்கிவிட்டனர். இதே போல, அரசுப் பணிக்காக, 5 முறையாக நேர்முகத் தேர்வில் கலந்துகொண்டும் எனக்கு வேலை வழங்கப்படவில்லை.
நிகழாண்டோடு, அரசுப் பணி வாய்ப்புக்கான வயதும் முடியப்போகிறது.
ஆகவே, எனது ஏழ்மை நிலை கருதி மாற்றுத் திறனாளியான எனக்கு அரசுப் பணி வாய்ப்பு வழங்க ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். இதையடுத்து போலீஸார், ஆட்சியரை நேரில் சந்தித்து மனு அளிக்குமாறு, அறிவுறுத்தி அவரை அனுப்பி வைத்தனர்.