தமிழ்நாடு முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாவட்ட பொதுக் குழு கூட்டம் விழுப்புரம் பீமநாயக்கன்தோப்பு நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு, புதிதாகத் தேர்வு செய்யப்பட்ட அதன் மாவட்டத் தலைவர் அருமுத்து வள்ளியப்பா தலைமை வகித்தார். மாவட்ட செயலர் எழிலன் முன்னிலை வகித்தார். முன்னாள் மாவட்டத் தலைவர் செந்தில்குமார், மாவட்ட பொருளாளர் சரவணன், விழுப்புரம் கல்வி மாவட்ட தலைவர் பெருமாள் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர். கூட்டத்தில் மாவட்டப் பொறுப்பாளர்கள் பாலமுரளி, பாரி, அருள், சரவணன், ஆரோக்கியதாஸ், ரமேஷ், திலகர் ஆகியோர் பங்கேற்றனர்.
கூட்டத்தில், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் குறித்து தமிழக முதல்வர் கண்ணியமற்ற முறையில் பேசியதற்கு கண்டனம் தெரிவிப்பது, தமிழக அரசு உடனடியாக ஜாக்டோ-ஜியோ பொறுப்பாளர்களை அழைத்து பேசி நிலுவையில் உள்ள கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும், தேர்ச்சி சதவீதத்தை காரணம் காட்டி மாணவர்களுக்கு காலை நேர வகுப்புகள் நடத்துவதை உடனடியாக நிறுத்த வேண்டும், அதிகப்படியாக காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை கருத்தில்கொண்டு ஆசிரியர்களுக்கு இரண்டாம் கட்ட பொது இடமாறுதல் கலந்தாய்வு நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.