விழுப்புரம் அருகே சாலை விபத்து: மாணவர் உள்பட இருவர் சாவு
விழுப்புரம் அருகே ஞாயிற்றுக்கிழமை இரவு இரு சக்கர வாகனம், ஆட்டோ மோதிக் கொண்ட விபத்தில் மாணவர் உள்பட இருவர் உயிரிழந்தனர்.
விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூர் அருகே ஆர்க்காடு கிராமத்தைச் சேர்ந்த வேளாங்கண்ணி மகன் சில்வர்ஸ்டார்(24). குளிர்சாதன இயந்திர மெக்கானிக். இவரது உறவினர் பெங்களூரைச் சேர்ந்த குழந்தையேசுவின் மகன் ராபின்சன்(10). பெங்களூரில் 5-ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில், ராபின்சன், ஆர்க்காட்டில் உள்ள தனது உறவினர் சில்வர் ஸ்டார் வீட்டுக்கு வந்திருந்தார்.
ஞாயிற்றுக்கிழமை மாலை சில்வர்ஸ்டார், ராபின்சனை அழைத்துக்கொண்டு, விழுப்புரம் அருகே காணையை அடுத்த அரியலூர் கிராமத்தில் வசிக்கும் தனது அக்காள் வீட்டுக்கு வந்தார். இதன்பிறகு, மீண்டும் ஊருக்குச் செல்வதற்காக சில்வர் ஸ்டார், ராபின்சனை அழைத்துக் கொண்டு இருசக்கர வாகனத்தில், ஞாயிற்றுக்கிழமை இரவு புறப்பட்டார்.
கோழிப்பட்டு-மாம்பழப்பட்டு சாலையில் உள்ள தனியார் பள்ளி அருகில் சென்றபோது, இரு சக்கர வாகனமும் எதிரே வந்த ஆட்டோவும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன. இதில், ராபின்சன், சில்வர்ஸ்டார் ஆகிய இருவரும் தூக்கி வீசப்பட்டு காயமடைந்தனர். தகவல் அறிந்து காணை போலீஸார் விரைந்து சென்று அவர்களை மீட்டு, விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு ராபின்சன் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். சில்வர் ஸ்டார் தீவிர சிகிச்சைக்காக, சென்னைக்கு அவசர ஊர்தி மூலம் அனுப்பி வைக்கப்பட்டார். வழியில், உடல் நிலை மோசமடையவே, அவர் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் திங்கள்கிழமை அதிகாலை உயிரிழந்தார். காணை போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.