பெருமாள் கோயில்களில் வைகுண்ட ஏகாதசி விழா

வைகுண்ட ஏகாதசியையொட்டி, விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பெருமாள் கோயில்களில் செவ்வாய்க்கிழமை அதிகாலை பரமபத வாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

வைகுண்ட ஏகாதசியையொட்டி, விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பெருமாள் கோயில்களில் செவ்வாய்க்கிழமை அதிகாலை பரமபத வாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.
விழுப்புரத்தில் பிரசித்தி பெற்ற ஜனகவல்லி தாயார் சமேத வைகுண்டவாச பெருமாள் கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழா கடந்த 9-ஆம் தேதி பகல் பத்து உற்சவத்துடன் தொடங்கியது. நாள்தோறும், பெருமாள் பல்வேறு அலங்காரங்களில் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலித்து வந்தார்.
பகல்பத்து உற்சவம் முடிந்து, வைகுண்ட ஏகாதசியையொட்டி, விழாவின் முக்கிய நிகழ்வாக பரமபத வாசல் திறப்பு நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை அதிகாலை நடைபெற்றது. 
இதையொட்டி, காலை முதல் வைகுண்டவாச பெருமாளுக்கு மகா தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து, பரமபத வாசல் வழியாக பெருமாள் எருந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழுப்புரம் மற்றும் சுற்றுவட்டார கிராமத்திலிருந்து ஏராளமான பக்தர்கள் பரமபதவாசல் வழியாக வந்து பெருமாளை தரிசனம் செய்தனர். பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.
செஞ்சி அருகே சிங்கவரத்தில் உள்ள ஸ்ரீரங்கநாதர் கோயில், திண்டிவனத்தில் உள்ள ஸ்ரீலட்சுமி நரசிம்ம பெருமாள் கோயில், பூவரசங்குப்பம் லட்சுமி நரசிம்மர் பெருமாள் கோயில், பரிக்கல் கிராமத்தில் உள்ள நரசிங்க பெருமாள் கோயில் உள்பட மாவட்டம் முழுவதும் உள்ள பெருமாள் கோயில்களில் செவ்வாய்க்கிழமை அதிகாலை பரமபத வாசல் திறப்பு நிகழ்ச்சி நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று பெருமாளை வழிபட்டனர்.
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி தில்லை கோவிந்தராஜப் பெருமாள் கோயிலில் பரமபத வாசல் திறப்பு நிகழ்வு செவ்வாய்க்கிழமை அதிகாலை 4.30 மணியளவில் நடைபெற்றது. 
தொடர்ந்து, பெருமாள் கோயிலை 3 முறை வலம் வந்து ஆண்டாள் சந்நிதியில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தார்.  மூலவர் பெருமாள் முத்தங்கி அலங்காரத்தில் காட்சியளித்தார். திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
திருக்கோவிலூர்: வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோயிலில் செவ்வாய்க்கிழமை அதிகாலை 4 மணிக்கு ஸ்ரீதேவி-பூதேவி சமேத தேகளீச பெருமாளுக்கு வேத பாராயணமும், சிறப்பு அபிஷேகமும் தொடர்ந்து, திருமஞ்சனம், ஆராதனைகளும் நடைபெற்றன.
 பின்னர் அதிகாலை 5 மணிக்கு நம்மாழ்வார் எதிர்கொண்டு அழைக்க, ஸ்ரீதேவி-பூதேவி சமேத தேகளீச பெருமாள், நம்மாழ்வாருக்கு காட்சியளித்தவாறு பரமபத வாசலை அடைந்து, பக்தர்களுக்கு காட்சியளித்தார். 
 இதில், திருக்கோவிலூர் அதன் சுற்றுவட்டாரக் கிராமங்களைச் சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமியைத் தரிசித்தனர். 
 சங்கராபுரத்தை அடுத்த தேவபாண்டலம் பார்த்தசாரதி பெருமாள் கோயில், சு.குளத்தூர் லட்சுமி நாராயண பெருமாள் கோயில், தியாகராஜபுரம் லட்சுமி நாராயண பெருமாள் கோயில்களில் பரமபத வாசல் திறப்பு செவ்வாய்க்கிழமை நடை
பெற்றது.  இதையொட்டி, ஏராளமான பக்தர்கள் நள்ளிரவில் இருந்தே கோயில் வாசலில் காத்திருந்தனர். பரமபத வாசல் திறப்பைத் தொடர்ந்து சிறப்பு பூஜைகள், வழிபாடுகள் நடைபெற்றன.
செஞ்சி: செஞ்சி அருகே உள்ள பழைமையான சிங்கவரம் அரங்கநாதர் சுவாமி கோயிலில், வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு பரமபத வாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
முன்னதாக, அதிகாலையில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஸ்ரீஅரங்கநாதசுவாமிக்கு சிறப்பு திருமஞ்சனம், சிறப்பு அலங்காரம் நடைபெற்றது. தொடர்ந்து ஸ்ரீஅரங்கநாதர் முத்தங்கி அலங்காரத்தில், ஸ்ரீநம்மாழ்வார் எதிரிட்டு பரமபதவாசல் வழியாக பக்தர்களுக்கு காட்சி அளித்தார். திரளான பக்தர்கள் தரிசித்தனர். 
இதேபோல, செஞ்சிக்கோட்டை ஸ்ரீவெங்கட்ரமணர் கோயிலில் பரமபத வாசல் திறப்பு விழா நடைபெற்றது. அன்று காலை ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஸ்ரீவெங்கட்ரமணருக்கு சிறப்பு திருமஞ்சனம், சிறப்பு அலங்காரம் நடைபெற்றது. தொடர்ந்து, ஸ்ரீவெங்கட்ரமணர் பரமபத வாசல் வழியாக வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார். 
 ஏற்பாடுகளை ஸ்ரீரங்கபூபதி கல்வி நிறுவனங்களின் தலைவர் ஆர்.பூபதி, வழக்குரைஞர் வைகைதமிழ்ச்செல்வன் உள்ளிட்டோர் செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com