Enable Javscript for better performance
அரகண்டநல்லூரில் தொடரும் போக்குவரத்து நெரிசல்- Dinamani

சுடச்சுட

    

    அரகண்டநல்லூரில் போக்குவரத்து நெரிசல் தொடர்வதால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். 
    திருக்கோவிலூரை அடுத்த அரகண்டநல்லூரில் தமிழ்நாடு ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் அமைந்துள்ளது. இந்தக் கூடத்துக்கு கடந்த 20 நாள்களுக்கும் மேலாக நெல் வரத்து அதிகரித்துள்ளது. இங்கு விளைபொருள்களை கொண்டுவரும் விவசாயிகளின் மாட்டு வண்டி, மினி டெம்போ போன்ற வாகனங்களைப் பயன்படுத்தி வருகின்றனர். மேலும், கொள்முதல் செய்த விளைபொருள்களை வெளியே கொண்டுசெல்லும் வியாபாரிகளின் லாரி உள்ளிட்ட வாகனங்களைப் பயன்படுத்துகின்றனர். இந்த வாகனங்கள் அனைத்தும் காமராஜர் சாலை வழியாக வந்து செல்கின்றன. 
    ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்துக்கு எதிரே உள்ள காமராஜர் சாலையின் இருபுறமும்  மரங்கள், மின் கம்பங்கள் அணிவகுத்துள்ளன. எஞ்சியுள்ள குறுகிய சாலைப் பரப்புக்குள்ளாகவே வாகனங்கள் செல்ல வேண்டியுள்ளது. ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்துக்கு விளைபொருள்களை ஏற்றிவரும் வாகனங்களின் எண்ணிக்கை தற்போது அதிகரித்துள்ளது. 
    இதில் பல வாகனங்கள் கூடத்துக்குள் அனுமதிக்கப்படாமல் சாலையிலேயே வரிசையாக நிறுத்தப்படுகின்றன. இதனால் காமராஜர் சாலையில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்துள்ளது. குறிப்பாக, ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்துக்கு முன் புதன்கிழமை அதிகாலை 5 மணி முதல் காலை 10 மணி வரை போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டனர். தவிர்க்க முடியாத காரணத்தால், அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் பலர் தாங்கள் வந்த பேருந்துகளில் இருந்து இறங்கி செல்லவேண்டிய இடத்துக்கு நடந்தே சென்றனர்.
      இதுகுறித்து  சமூக ஆர்வலர்கள் கூறியதாவது: ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்துக்கு எதிரே காமராஜர் சாலையின் இருபுறமும் புத்துமாரியம்மன் கோயிலில் தொடங்கி, பச்சையம்மன் கோயில் வரை வளர்ந்துள்ள மரங்கள் மற்றும் மின் கம்பங்களை அகற்ற வேண்டும். அப்போதுதான் போக்குவரத்து நெரிசல் பிரச்னைக்கு நிரந்தத் தீர்வு கிடைக்கும். மேலும், ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்துக்கு பின்புறத்தில் வழி ஏற்படுத்த வேண்டும் என்றனர். 
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai