Enable Javscript for better performance
அவசர ஊர்தி தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்- Dinamani

சுடச்சுட

    

    தமிழ்நாடு 108 அவசர ஊர்தி தொழிலாளர்கள் சங்கத்தினர் சார்பில், ஊதிய உயர்வு தொடர்பான கண்டன ஆர்ப்பாட்டம் விழுப்புரத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
    விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாவட்டச் செயலர் பூபாலன் தலைமை வகித்தார். பொருளாளர் ஜெயப்பிரகாஷ், துணைத் தலைவர் மகாதேவன் உள்ளிட்டோர் பங்கேற்று கண்டன உரையாற்றினர்.
    தமிழகத்தில் உயிர் காக்கும் பணியில் 24 மணி நேரமும் செயல்பட்டு வரும் 108 அவசர ஊர்தி தொழிலாளர்களுக்கு 2017-ஆம் ஆண்டின் வருடாந்திர ஊதிய உயர்வுக்கு தமிழக அரசு வழங்கிய பணத்தை முழுமையாக முறையாக  வழங்க வேண்டும். 
    தொழிலாளர்கள் ஈட்டிய விடுப்புக்கான பணத்தை தொழில் தகராறுகள் சட்டத்தின் கீழ், தொழிலாளர்களுக்கு முறையாக வழங்க வேண்டும். தமிழக மக்களின் வரிப் பணத்தில் இயங்கி வரும் 108 அவசர ஊர்தி சேவைத் திட்டத்தில் தொழிலாளர்களின் சம்பளம், வாகனப் பராமரிப்பு போன்றவற்றில் முறைகேடுகளில் ஈடுபட்டு வரும் தனியார் பராமரிப்பு நிறுவனத்தின் மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். தொழிற்சங்கத்தினருடன் ஆலோசிக்காமல், தமிழக அரசு வழங்கிய பணத்தை தொழிலாளர்களுக்கு வழங்காமல் 6 சதவீதம் சம்பள உயர்வு மட்டுமே வழங்க தன்னிச்சையாக முடிவெடுத்து வழங்கிவிட்டு, அரசிடம் 15 சதவீதம் வழங்கியதாக பொய்யான தகவலை அளித்து வரும் தனியார் பராமரிப்பு நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
    அந்த நிர்வாகத்தின் பாரபட்சமான தொழிலாளர் விரோதப்போக்கை கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தினர்.
    இதில், விழுப்புரம் மாவட்டத்தில் 108 அவசர ஊர்தியில் பணியாற்றி வரும் தொழிலாளர்கள் 60 பேர் கலந்து கொண்டனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai