மீண்டும் திறக்கப்பட்ட மதுக் கடை பொதுமக்கள் எதிர்ப்பால் மூடல்

விழுப்புரத்தில் மீண்டும் திறக்கப்பட்ட டாஸ்மாக் மதுக் கடை, பொதுமக்கள் எதிர்ப்பால் செவ்வாய்க்கிழமை மூடப்பட்டது.

விழுப்புரத்தில் மீண்டும் திறக்கப்பட்ட டாஸ்மாக் மதுக் கடை, பொதுமக்கள் எதிர்ப்பால் செவ்வாய்க்கிழமை மூடப்பட்டது.
 விழுப்புரம் மாவட்டத்தில் இயங்கி வந்த 204 டாஸ்மாக் மதுக் கடைகளில், 30 கடைகள் கடந்த ஏப்ரல் மாதம் உயர் நீதிமன்ற உத்தரவின் பேரில் மூடப்பட்டன. இதைத் தொடர்ந்து, அரசுத் தரப்பில் மேல்முறையீடு செய்து, நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் உள்ள நகர நெடுஞ்சாலைகளில், வணிக வளாகப் பகுதிகளில் விதிகளுக்கு உள்பட்டு, டாஸ்மாக் கடைகளை மீண்டும் திறக்க நீதிமன்றத்தில் அனுமதி பெறப்பட்டது.
 இதையடுத்து, விழுப்புரம் மாவட்டத்தில் முதல் கட்டமாக, 9 மதுக் கடைகளை திறக்க மாவட்ட ஆட்சியரிடம் டாஸ்மாக் நிர்வாகம் அனுமதி பெற்றது. அதன்படி, திங்கள்கிழமை முதல் மதுக் கடைகளை படிப்படியாகத் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
 இதன்படி, விழுப்புரத்தில் சென்னை சாலை டாஸ்மாக் கிடங்குக்கு எதிரே, ஏற்கெனவே இருந்த இடத்தில் ஒரு மதுக் கடையும், விக்கிரவாண்டில் ஒரு மதுக் கடையும், உளுந்தூர்பேட்டையில் இரு கடைகளும், திருக்கோவிலூரில் இரு கடைகளும், திண்டிவனத்தில் இரு கடைகளும் திங்கள்கிழமை திறக்கப்பட்டன.
 இதனைத் தொடர்ந்து, விழுப்புரம் மேல வீதியில் புதிய மேம்பாலத்துக்கு அருகில் ஏற்கெனவே இயங்கி வந்த டாஸ்மாக் மதுக் கடையை, மேற்பார்வையாளர் ரவிச்சந்திரன், விற்பனையாளர் விஜயகுமார் உள்ளிட்ட ஊழியர்கள் செவ்வாய்க்கிழமை திறந்தனர்.
 அங்கு பகல் 12 மணிக்கு மது விற்பனை நடைபெற்றபோது, அப்பகுதி பொது மக்கள் திரண்டு வந்து, மதுக் கடையை மூட வலியுறுத்தி, கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
 இந்தப் பகுதியில், மீண்டும் மதுக்கடை திறக்கப்பட்டதால், மதுக் கடை அருகேயும், புதிதாக கட்டப்பட்டு வரும் மேம்பாலத்துக்கு கீழ் பகுதியிலும், சாலையிலும் நின்றபடி பலர் மது அருந்துகின்றனர். இதனால், பெண்கள், மாணவர்கள் சென்று வருவதற்கு பாதுகாப்பற்ற நிலை உள்ளது. ஆகவே, இந்த மதுக் கடையை திறக்கக் கூடாது, வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் என்றனர்.
 இதுகுறித்து அறிந்து வந்த விழுப்புரம் மேற்கு உதவி ஆய்வாளர் மருதப்பன் தலைமையிலான போலீஸார், போராட்டம் நடத்தியவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து, அங்கு திறக்கப்பட்ட மதுக்கடை போலீஸார் அறிவுறுத்தலின் பேரில் மூடப்பட்டது.
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com