Enable Javscript for better performance
திருவெண்ணெய்நல்லூர் அருகே ரயில்வே சுரங்கப் பாதை பணி தொடக்கம்- Dinamani

சுடச்சுட

    

    திருவெண்ணெய்நல்லூர் அருகே ரயில்வே சுரங்கப் பாதை பணி தொடக்கம்

    By DIN  |   Published on : 31st March 2018 10:13 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருவெண்ணெய் நல்லூர் அருகே ரயில்வே சுரங்கப்பாதை அமைக்கும் பணி வெள்ளிக்கிழமை தொடங்கியது.
    ஆளில்லா ரயில்வே கடவுப்பாதைகளில் விபத்துகள் நிகழ்வதைத் தடுக்கும் வகையில், அந்தப் பாதைகளில் ஆள்களை நியமித்தல், பாதையை மூடுதல், சுரங்கப்பாதை அமைத்தல் போன்ற பணிகளை ரயில்வே நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது.
    அதன்படி, விருத்தாசலம் - விழுப்புரம் இடையிலான வழித்தடத்தில் 2 இடங்களில் ஏற்கெனவே சுரங்கப்பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதைத் தொடர்ந்து, திருவெண்ணெய்நல்லூர் அருகேயும், ஜானகிபுரம் அருகேயும் சுரங்கப்பாதை அமைக்க திட்டமிடப்பட்டது.
    ஜானகிபுரம் அருகே சாலாமேடு பகுதிக்குச் செல்லும் கடவுப்பாதையை சுரங்கப்பாதையாக மாற்றும் பணி கடந்த சில வாரங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டு நடைபெற்றது வருகிறது. இந்த நிலையில், திருவெண்ணெய் நல்லூர் அருகே அரும்பட்டு - கிரிமேடு இடையே ஆளில்லாத ரயில்வே கடவுப்பாதையை சுரங்கப்பாதையாக மாற்றும் பணி வெள்ளிக்கிழமை தொடங்கியது.
    முதல்கட்டமாக, அந்த இடத்தில் இரு வழிபாதையாக உள்ள ரயில்வே தண்டவாளங்களில் விருத்தாசலம் - விழுப்புரம் மார்க்கமாகச் செல்லும் ரயில் தண்டவாளத்தை மட்டும் அகற்றிவிட்டு, அந்த இடத்தில் ரயில் பாதையிலிருந்து 7 மீட்டர் ஆழத்துக்கு (23 அடி) பள்ளம் தொண்டப்பட்டது. 
    அந்த பள்ளத்தில் ஏற்கெனவே தயார் செய்யப்பட்ட சிமென்ட் சிலாப்கள் கிரேன் மூலம் கொண்டு வந்து வைக்கப்பட்டது. பின்னர், மண் கொட்டி மூடப்பட்டது. மீண்டும் அந்த இடத்தில் ரயில்பாதை போடும் பணி மேற்கொளப்பட்டது.
    நண்பகல் 12 மணி அளவில் தொடங்கப்பட்ட இந்தப் பணியானது இரவு 9 வரையில் நடைபெற்றது. திருச்சி கோட்ட ரயில்வே பொறியாளர் கார்த்திகேயன், விருத்தாசலம் பிரிவுப் பொறியாளர்கள் முத்துக்குமாரன், கண்ணன் உள்ளிட்ட அதிகாரிகள் பணியைக் கண்காணித்தனர்.
    திருவெண்ணெய்நல்லூர் - பரிக்கல் ரயில் நிலையங்களுக்கு இடையே நடைபெற்ற இந்த சுரங்கப்பாதை அமைக்கும் பணி காரணமாக, இந்தப் பகுதியில் ரயில் தண்டவாளம் அகற்றப்பட்டதால், விருத்தாசலத்திலிருந்து விழுப்புரம் மார்க்கத்தில் செல்லும் ரயில்கள் அருகில் உள்ள மற்றொரு ரயில் தண்டவாளத்தில் இயக்கப்பட்டன.
    இதைத் தொடர்ந்து, அந்த இடத்தில் வரும் ஞாயிற்றுக்கிழமை இதேபோன்று விழுப்புரம் - விருத்தாசலம் மார்க்கமாக செல்லும் ரயில் தண்டவாளம் அகற்றப்பட்டு,  சுரங்கப்பாதைக்கான சிமென்ட் சிலாப்கள் அமைக்கப்படும் என்று ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai