Enable Javscript for better performance
நெடுஞ்சாலை ரோந்து வாகனங்கள்: ஜி.பி.எஸ். தொழில்நுட்பத்தில் கண்காணிப்பு- Dinamani

சுடச்சுட

    

    நெடுஞ்சாலை ரோந்து வாகனங்கள்: ஜி.பி.எஸ். தொழில்நுட்பத்தில் கண்காணிப்பு

    By DIN  |   Published on : 31st March 2018 10:12 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    விழுப்புரம் மாவட்டத்தில் நெடுஞ்சாலை ரோந்து வாகனங்களை ஜி.பி.எஸ். கருவி மூலம் தொடர்ந்து கண்காணிக்கும் பணி வெள்ளிக்கிழமை தொடங்கியது.
     தமிழகத்தில் அதிக தொலைவு நெடுஞ்சாலைகளை கொண்ட மாவட்டம் விழுப்புரமாகும். இந்த மாவட்டத்தில், சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலை, விக்கிரவாண்டி - கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலை, புதுச்சேரி - திண்டிவனம் -திருவண்ணாமலை தேசிய நெடுஞ்சாலை, விழுப்புரம் - திருவண்ணாமலை தேசிய நெடுஞ்சாலை, உளுந்தூர்பேட்டை - சேலம் தேசிய நெடுஞ்சாலை, புதுச்சேரி-விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலைகளும், மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மாநில நெடுஞ்சாலைகளும் செல்கின்றன. இந்த சாலைகளில் விபத்துகள், குற்றச் சம்பவங்களை தடுக்கும் வகையில் கண்காணிப்புப் பணியை 19 நெடுஞ்சாலை ரோந்து வாகனங்கள் மேற்கொண்டு வருகின்றன. இந்த வாகனங்கள், முறையாகக் கண்காணிப்புப் பணிகளை மேற்கொள்கின்றனவா என்பதைக் கண்காணித்து, விரைவாக உத்தரவுகளை அளித்து செல்பட வைப்பது அவசியமாகிறது. 
     இந்த நிலையில், காவல் துறையின் நெடுஞ்சாலை ரோந்து வாகனங்களை ஜிபிஎஸ் உள்ளிட்ட நவீன வசதிகளுடன் மேம்படுத்த திட்டமிடப்பட்டு, ரூ.13 லட்சம் செலவில்  அதற்கான உபகரணங்கள் வாங்கப்பட்டன. இதில், எச்சரிக்கை ஒலியுடன் கூடிய சிவப்பு, நீல வண்ண விளக்குகள், எல்இடி அறிவிப்புப் பலகைகள், போலீஸாருக்கான பிரதிபலிப்பு ஆடைகள், ரெயின் கோட் ஆகியவை பெறப்பட்டன. பின்னர், இந்தக் கருவிகளை வாகனங்களில் பொருத்தும் பணி நிறைவடைந்து. அதன்பிறகு, அந்த வாகனங்கள் செல்லும் பாதை, வேகம் போன்றவற்றைக் கண்காணிக்க ஜி.பி.எஸ். கருவியும் பொருத்தப்பட்டுள்ளது. இந்த சேவையை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் வெள்ளிக்கிழமை தொடக்கி வைத்தார்.
      பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: மாவட்ட காவல் தலைமையகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறையில் இருந்து ரோந்து வாகனங்களை கண்காணிக்க அவற்றில் ஜி.பி.எஸ். கருவி பொருத்தப்பட்டது. இதற்காக, பிரமாண்ட எல்.இ.டி. திரை அமைக்கப்பட்டுள்ளது. இந்த திரையில் மாவட்ட வரைபடம், நெடுஞ்சாலை பாதைகள் தெளிவாகத் தெரியும். இதைக் கொண்டு, நெடுஞ்சாலை ரோந்து வாகனம் எங்கு, எவ்வளது வேகத்தில் செல்கிறது, எந்த இடத்தில் நிற்கிறது, எங்கெல்லாம் சென்றது, குறிப்பிட்ட பாதையில் செல்கிறதா என்பன உள்ளிட்டவற்றை கட்டுப்பாட்டு அறையில் இருந்தவாறே கண்காணிக்க முடியும். இதற்காக, 24 மணி நேரமும் போலீஸார் நியமிக்கப்படுவர்.
      மேலும், குறிப்பட்ட ரோந்து வாகனத்தில், அந்த நேரத்தில் பணியில் இருக்கும் போலீஸாரை தொடர்புகொள்ள செல்லிடப்பேசி எண்ணையும் உடனடியாக அறிய முடியும். அந்த செல்லிடப்பேசி எண் மூலமாகவும், வாகனத்தில் இருக்கும் மைக் மூலமாகவும் போலீஸாரை சுலபமாகத் தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்து, குறிப்பிட்ட இடத்துக்கு உடனடியாகச் செல்ல அறிவுறுத்த முடியும். 
    முதல் கட்டமாக தற்போது 18 வாகனங்களில் ஜி.பி.எஸ். வசதி அமைக்கப்பட்டுள்ளது. மேலும், ஒரு வாகனத்திலும்  பொருத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் அவர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai