Enable Javscript for better performance
பாதசாரிகளுக்கு பாதுகாப்பான நடைமேடை அமைக்கப்படுமா?- Dinamani

சுடச்சுட

    

    திருக்கோவிலூரில் பிரதான சாலையில் பாதுகாப்பான  நடைமேடை அமைக்க  வேண்டும் என பாதசாரிகள்  கோரிக்கை  விடுத்துள்ளனர்.  
    திருக்கோவிலூரில் உள்ள சாலைகளில் மக்கள் பயன்பாட்டுக்கு மிக முக்கியமானதாக மருத்துவமனை சாலை உள்ளது. 
     இந்தச் சாலையில் அரசு மருத்துவமனை, சார்-பதிவாளர் அலுவலகம், மின் வாரிய அலுவலகம், ஆயுள் காப்பீட்டுக் கழக அலுவலகம், பாரத ஸ்டேட் வங்கி, நெடுஞ்சாலைத் துறை அலுவலகம், வனச்சரக அலுவலகம் ஆகியவைகள் அமைந்துள்ளன. 
     இதனால் உள்ளூர் மக்கள் மட்டுமன்றி, சுற்றுவட்டார கிராம பொதுமக்களும் அதிகளவில் இச்சாலையை பயன்படுத்துகின்றனர். 
    பழுதடைந்து காணப்பட்ட இச்சாலை அண்மையில் சீரமைக்கப்பட்டது. சீரமைப்புக்குப் பிறகு விரிவுபடுத்தப்பட்ட இச்சாலையில், பேருந்து நிலையத்தில் இருந்து விழுப்புரம், திருவண்ணாமலை, கடலூர் மார்க்கமாக செல்லும் பேருந்துகள் அதி வேகத்தில் இயக்கப்படுகின்றன. 
    பேருந்து நிலையத்தில் இருந்து நான்குமுனை பேருந்து நிறுத்தம் நோக்கி இவ்விதம் பயணிகள் பேருந்து செல்லும் அதே நேரத்தில், பேருந்து நிலையத்துக்கு வரும் அனைத்து வாகனங்களும் நான்குமுனை வழியாகவே மருத்துவமனை சாலைக்குள் நுழைகின்றன.  
    இதனால் விரிவுபடுத்தப்பட்ட சாலையில் எதிரும் புதிருமாக வாகனங்கள் அதி வேகத்தில் இயக்கப்பட்டு வருகிறது. 
    எனவே, இச்சாலையில் உள்ள அரசு அலுவலகங்களுக்கு செல்லும் பாதசாரிகளுக்கு பாதுகாப்பற்ற சூழல் ஏற்பட்டுள்ளது. 
    இதையடுத்து, விரிவுபடுத்தப்பட்ட சாலையின் இருபுறமும் ஆக்கிரமிப்புகளை அகற்றி, பாதசாரிகளுக்கு பாதுகாப்பான நடைமேடை அமைப்பதுடன், நான்கு முனை சந்திப்பில் போக்குவரத்து காவல்துறை விழிப்புடன் பணியாற்றி, விபத்துகளை தவிர்க்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai