Enable Javscript for better performance
பால் வேனில் மதுப் புட்டிகளை கடத்திச் சென்ற இளைஞர் கைது- Dinamani

சுடச்சுட

    

    பால் வேனில் மதுப் புட்டிகளை கடத்திச் சென்ற இளைஞர் கைது

    By DIN  |   Published on : 31st March 2018 10:11 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    புதுச்சேரியிலிருந்து பால் வேனில் ரூ.15 லட்சம் மதிப்பிலான மதுப் புட்டிகளை கடத்திச் சென்ற இளைஞரை போலீஸார் கைது செய்தனர்.
    விழுப்புரம் அருகேயுள்ள சிறுவந்தாடு பகுதியில் உள்ள மதுவிலக்கு சோதனைச் சாவடியில் காவல் ஆய்வாளர் பூங்கோதை தலைமையிலான போலீஸார் வெள்ளிக்கிழமை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக புதுச்சேரி மடுகரை பகுதியில் இருந்து வந்த பால் வேனை நிறுத்தி சோதனையிட்டனர். அதில் பால் பாக்கெட்டுகளுக்குப் பதிலாக மொத்தம் 80 அட்டைப் பெட்டிகளில் 12,480 மதுப் புட்டிகள் இருந்தன.
    வேனில் இருந்த விழுப்புரம் அருகேயுள்ள கலிஞ்சிகுப்பம் கிராமத்தைச் சேர்ந்த கிருஷ்ணன் மகன் அன்பரசுவை (26) போலீஸார் கைது செய்தனர். மேலும், மதுப் புட்டிகள், வேனை பறிமுதல் செய்த போலீஸார், அவற்றை விழுப்புரம் மதுவிலக்குப் பிரிவு போலீஸாரிடம் ஒப்படைத்தனர். பறிமுதல் செய்யப்பட்ட மதுப் புட்டிகளின் மதிப்பு சுமார் ரூ.15 லட்சம் எனக் கூறப்படுகிறது.
    இதில் தொடர்புடைய வீராணம் கிராமத்தைச் சேர்ந்த பிரகாஷ், கலிஞ்சிக்குப்பத்தைச் சேர்ந்த இளங்கோ, சின்ன மடத்தைச் சேர்ந்த திருவேங்கடம் ஆகியோர் மீது மதுவிலக்கு போலீஸார் வழக்குப் பதிந்து தேடி வருகின்றனர்.
    அவசர ஊர்திகளையும் சோதனை செய்ய உத்தரவு: பறிமுதல் செய்யப்பட்ட மதுப் புட்டிகளை விழுப்புரம் மாவட்ட எஸ்.பி. ஜெயக்குமார் வெள்ளிக்கிழமை மாலை பார்வையிட்டார். புதுச்சேரியிலிருந்து விழுப்புரம் மாவட்டத்துக்கு வரும் பால் வேன், அவசர ஊர்திகளில் சோதனையிடுவதை போலீஸார் தவிர்த்து வந்தனர். இனி அவசர ஊர்திகளையும் போலீஸார் சோதனையிட உத்தரவிட்டுள்ளதாக எஸ்.பி. தெரிவித்தார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai