Enable Javscript for better performance
முருகன் கோயில்களில் பங்குனி உத்திரத் திருவிழா- Dinamani

சுடச்சுட

    

    விழுப்புரம் மாவட்டத்தில் பல்வேறு கோயில்களில் பங்குனி உத்திர திருவிழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.
     விழுப்புரம் அருகே முத்தாம்பாளையம் பாலமுருகன் கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திரப் பெருவிழா விமரிசையாக நடைபெற்று வருகிறது.  நிகழாண்டுக்கான செடல் உற்சவ விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, காலையில் பாலமுருகனுக்கு அபிஷேக, ஆராதனை நடைபெற்று விழா தொடங்கியது. இதையடுத்து,  பகல் 12 மணியளவில் பக்தர்கள் தங்களது உடலில் அலகுகளை குத்தி செடல் உற்சவத்தை தொடங்கினர்.  பகல் 1 மணிக்கு செடல் உற்சவ ஊர்வலம் கோயிலில் இருந்து புறப்பட்டது. இதில், கார்,  வேன்,  மினி லாரி,  டிராக்டர்,  மாட்டு வண்டிகள் உள்ளிட்ட வாகனங்களில் பாலமுருகன் அலங்கரிக்கப்பட்டு காட்சியளித்தார். இதில்,  நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள் அலகு குத்திக்கொண்டு கடும் வெயிலில் கார், வேன் உள்ளிட்ட வாகனங்களை உடலில் கட்டி இழுத்து வந்தனர்.
     முத்தாம்பாளையம் பாலமுருகன் கோயிலில் இருந்து சென்னை நெடுஞ்சாலை,  விழுப்புரம் முத்தோப்பு,  வடக்கு வீதி,  திருவிக வீதி,  நேரு வீதி,  மேல வீதி,  மீண்டும் சென்னை சாலை வழியாக விழுப்புரம் நகரைச் சுற்றி 5 கிலோ மீட்டர் தொலைவுக்கு செடல் உற்சவம் அணிவகுத்துச் சென்றது. திரளான பக்தர்கள் வழிபட்டனர்.
    கள்ளக்குறிச்சியில்... 
    கள்ளக்குறிச்சியை அடுத்த இந்திலி முருகன் கோயிலில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு, கோயிலில் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன. சுவாமிக்கு வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு காட்சியளித்தார்.
    தொடர்ந்து, மாலை 4.30 மணிக்கு தேரோட்டம் நடைபெற்றது. முன்னாள் அமைச்சர் ப.மோகன் தேரின் வடத்தைப் பிடித்து இழுத்து தொடக்கிவைத்தார். தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
    சின்னசேலம்  விஜயபுரம் பகுதியில்...
    அதேபோல கள்ளக்குறிச்சியை அடுத்த சின்னசேலம் விஜயபுரம் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ செல்வ முருகன் கோயிலில் பங்குனி உத்திரத்தையொட்டி, தேரோட்டம் நடைபெற்றது.
    தேரை முன்னாள் அமைச்சர் ப.மோகன், கள்ளக்குறிச்சி காவல் துணைக் கண்காணிப்பாளர் வி.கோமதி உள்பட ஊர் முக்கியதர்கள் பலர் வடம் பிடித்து இழுத்து தொடக்கி வைத்தனர். விழாவில், திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமியை வழிபட்டனர்.
    செஞ்சியில்... 
    செஞ்சி வட்டம், மேல்ஒலக்கூர் பசுமலை சுப்பிரமணிய சுவாமி கோயில் தேரோட்டம் வியாழக்கிழமை மாலை நடைபெற்றது.
    மேல்ஒலக்கூர் சுப்பிரமணிய சுவாமி பிரம்மோற்சவ விழா கடந்த 21-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதன் தொடர்ச்சியாக 8-ஆம் நாள் சுவாமிக்கு திருக்கல்யாணமும்,  9-ஆம் நாள் சுப்பிரமணியர் தேரில் வலம் வரும் வைபவமும் நடைபெற்றன. விழாவில், செஞ்சி வட்டத்தைச் சேர்ந்த ஆயிரகணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து நேர்த்திக் கடனை நிறைவேற்றினர்.
    ஆதின பரம்பரை அறங்காவலர் சுப்ரமணிய சோமயாஜீலு, மயிலம் 
    எம்.எல்.ஏ. இரா.மாசிலாமணி, வல்லம் வடக்கு ஒன்றிய திமுக செயலர் அண்ணாதுரை, ஊராட்சி முன்னாள் தலைவர் கோவிந்தராஜு உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    அவலூர்பேட்டையில்...
    மேல்மலையனூர் வட்டம், அவலூர்பேட்டை முருகப்பெருமான் கோயிலில் 95-ஆம் ஆண்டு பங்குனி உத்திர பெருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. விழாவில் சக்திவேலுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்து, சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. தொடர்ந்து, மலை மீதுள்ள முருகன் கோயிலுக்கு சக்திவேல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு வழிபாடு நடைபெற்றது.
    விழாவில் பக்தர்கள் சக்திவேல், தேரிழுத்தல், வேல்களுடன் மாட வீதிகளில் வலம் வந்தனர். பக்தர்கள் பலர் அலகு குத்தியும், நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் பூந்தேரிழுத்தும் தங்களது வேண்டுதலை நிறைவேற்றினர். அவலூர்பேட்டை, அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
    திருக்கோவிலூரில்....
    திருக்கோவிலூர் - கீழையூர் வீரட்டானேஸ்வரர் கோயிலில் பங்குனி உத்திர விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. முன்னதாக, காலை 9 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, புண்யாஹவாச்சனம் உள்ளிட்ட பூஜைகளுடன் சோமாஸ்கந்தர், முருகப் பெருமானுக்கு மஹா அபிஷேகமும், முருகப் பெருமானுக்கு விபூதி அலங்காரத்தில் சோடசோபஸார தீபாராதனை ஆகியவை நடைபெற்றன.
    மாலை 6 மணிக்கு மூலமூர்த்திகளிடம் அனுக்ஞை நடைபெற்று, சோமாஸ்கந்தருக்கு திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. தொடர்ந்து, கோபுர தரிசனத்துடன், சுவாமி திருவீதி உலா நடைபெற்றது. 
    இதேபோல, திருக்கோவிலூர், அதன் சுற்றுவட்டாரக் கிராமங்களில் உள்ள முருகன் கோயில்களில் பங்குனி உத்திர விழா வெள்ளிக்கிழமை சிறப்பாக நடைபெற்றது.  
    உளுந்தூர்பேட்டையில்... 
    உளுந்தூர்பேட்டை ஸ்ரீ சுப்ரமணிய சுவாமி கோயிலில் நடைபெற்ற  பங்குனி உத்திர விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் காவடி எடுத்துச் சென்றனர்.
    விழாவுக்கு உளுந்தூர்பேட்டை ராமகிருஷ்ணா ஆசிரமத் தலைமை ஸ்வாமிஜி ஸ்ரீமத் ஸ்வாமி அனந்தானந்தஜி மகராஜ் தலைமை  வகித்தார். காலை 8 மணிக்கு காவடி ஸ்தாபன பூஜை, 1,008 காவடிகள் எடுத்தல், தேர், செடல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. நண்பகல் 12 மணிக்கு  சுவாமிக்கு மகா அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. மாலை 3 மணிக்கு நாகஸ்வர கச்சேரியும்,  இரவு 7 மணிக்கு இன்னிசை நிகழ்ச்சியும் நடைபெற்றன. 
    இரவு 8 மணிக்கு ஸ்ரீ சுப்ரமணிய சுவாமி வள்ளி - தெய்வானை சமேதராய் அலங்கரிக்கப்பட்ட முத்து பல்லக்கில் ஊர் வலம் வந்தார். அப்போது, கரகாட்டம், மயிலாட்டம், ஒயிலாட்டம் ஆகியவை நடைபெற்றன.

    மிளகாய்ப்பொடி அபிஷேகம்
    விழுப்புரம் முத்தோப்பு அகரம்பாட்டை பாலமுருகன் கோயிலில் 7-ஆம் ஆண்டு பங்குனி உத்திர காவடி உத்சவம் வியாழக்கிழமை தொடங்கியது.  தொடர்ந்து, வெள்ளிக்கிழமை பங்குனி உத்திர தேர்த் திருவிழா நடைபெற்றது. காலை 6 மணிக்கு மூலவர் பாலமுருகனுக்கு அபிஷேக,  ஆராதனையும், காலை 10 மணிக்கு வெற்றி வேல் வீதி உலாவும் நடைபெற்றது. இதையடுத்து, செடல் உற்சவம் நடைபெற்றது. இதில், பக்தர்கள் அலகு குத்தி வாகனங்களை இழுத்து வழிபட்டனர்.  தொடர்ந்து,  வெற்றி வேலுக்கு மிளகாய்ப்பொடி அபிஷேகம் நடைபெற்றது.  இதில், நேர்த்திக் கடன் செலுத்திய பக்தர்களின் உடலில் மிளகாய்ப்பொடி கலவை ஊற்றி  அபிஷேகம் செய்யப்பட்டது. இதே போல,  கற்பூர அபிஷேகமும் நடைபெற்றது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai