Enable Javscript for better performance
தமிழக ஆளுநர் இன்று விழுப்புரத்தில் ஆய்வு- Dinamani

சுடச்சுட

    

    தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் விழுப்புரம் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை (மே 18) ஆய்வு மேற்கொள்கிறார்.
     தமிழக ஆளுநரான பன்வாரிலால் புரோஹித் வெளி மாவட்டங்களுக்கு அவ்வப்போது சுற்றுப் பயணம் மேற்கொண்டு தூய்மை இந்தியா திட்டம், பிரதமரின் வீடு கட்டும் திட்டம் உள்ளிட்டப் பணிகளை ஆய்வு செய்து வருகிறார். தவிர, துறை ரீதியாக அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி, அனைத்துத் தரப்பினரிடமிருந்து கோரிக்கை மனுக்களையும் பெற்று வருகிறார். ஆளுநரின் இதுபோன்ற நடவடிக்கைகள் மாநில அரசின் உரிமையில் தலையிடுவது போன்று இருப்பதாகக் கூறி திமுக, விசிக உள்ளிட்ட கட்சியினர் ஆங்காங்கே அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
     இந்த நிலையில், ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் வெள்ளிக்கிழமை விழுப்புரம் மாவட்டத்தில் ஆய்வு மேற்கொள்ள உள்ளார். இதற்காக, காலை சென்னையிலிருந்து காரில் வரும் அவர், வானூர் வட்டம், பூத்துறை கிராமத்தில் தூய்மை இந்தியா திட்டப் பணிகளை தொடக்கி வைத்துப் பார்வையிடுகிறார். அங்கிருந்து, அருகேயுள்ள ஆரோவில் சர்வதேச நகரில் அமைந்துள்ள மாத்திரி மந்திர் தியான மையத்துக்கு செல்கிறார்.
     பகல் ஒரு மணிக்கு விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் உள்ள சுற்றுலா மாளிகைக்கு வருகிறார். அங்கு மதிய உணவுக்குப் பிறகு, அனைத்து அரசுத் துறை உயர் அதிகாரிகளுடன் ஆய்வு செய்து, மாவட்டத்தின் நிலவரங்கள் குறித்து கேட்டறிகிறார்.
     தொடர்ந்து, பொது மக்கள், மக்கள் பிரதிநிதிகளிடம் இருந்து கோரிக்கை மனுக்களைப் பெறுகிறார். அங்குள்ள அரசுத் துறையினரின் புகைப்பட கண்காட்சியையும் அவர் பார்வையிடுகிறார்.
     இதையடுத்து, மாலை 5 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு விழுப்புரம் புதிய பேருந்து நிலையப் பகுதியில் தூய்மைப் பணியை தொடக்கி வைக்கிறார். இதனைத் தொடர்ந்து, சென்னை புறப்பட்டுச் செல்கிறார்.
     ஆளுநர் வருகையையொட்டி, விழுப்புரம் சுற்றுலா மாளிகை வளாகம் புதுப்பிக்கப்பட்டு வருகிறது. அவர் வருகை தரும் திருச்சி சாலை, ஆட்சியர் அலுவலகப் பகுதிகளில் அவசரமாக தூய்மைப் பணி செய்யப்படுகிறது. திருச்சி சாலையில் இருந்த வேகத்தடைகள் அகற்றப்பட்டன. பாதுகாப்புக்காக போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். மாவட்ட ஆட்சியர் இல.சுப்பிரமணியன் தலைமையில் ஆளுநர் ஆய்வுக்கான ஏற்பாடுகளும், காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார் தலைமையில் பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
     திமுகவினர் எதிர்ப்பு: இதனிடையே, ஆளுநர் ஆய்வு மேற்கொள்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து, திமுக மத்திய மாவட்டச் செயலர் க.பொன்முடி தலைமையில், ஆட்சியர் அலுவலகம் முன் கருப்புக் கொடி போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் திமுக, காங்கிரஸ், விசிக உள்ளிட்ட கட்சியினர் பங்கேற்க உள்ளதாகக் கூறப்படுகிறது.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai