Enable Javscript for better performance
மருத்துவ அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்- Dinamani

சுடச்சுட

    

    இருபது அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு மருத்துவ அலுவலர்கள் சங்கத்தினர் விழுப்புரத்தில் வியாழக்கிழமை கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் .
     மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே மத்திய, மாநில அரசுகள் மற்றும் இந்திய மருத்துவ கவுன்சிலின் கவனத்தை ஈர்க்கும் வகையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு, சங்கத்தின் மாநிலத் தலைவர் ஞானப்பிரகாசம் தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் கிருஷ்ணராஜ், செயலாளர் வெங்கடகிருஷ்ணன், பொருளாளர் ஆலென்பிரபாகரன், துணைத் தலைவர்கள் மலர்விழி, கோபி, இணைச் செயலர்கள் ஆர்த்தி, கோதண்டம், ஒருங்கிணைப்பாளர் ராஜராஜன், மகளிரணிச் செயலர் சூர்யா உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
     மாநிலச் செயலாளர் கதிர்வேல், பொருளாளர் கோபிநாத் ஆகியோர் சிறப்புரையாற்றினர். தமிழகத்தில் நிகழ் ஆண்டு நடைபெற உள்ள முதுநிலை மருத்துவப் பட்டப்படிப்பு மாணவர் சேர்க்கையில் தற்காலிகத் தீர்வாக, அனைத்து அரசு மருத்துவர்களும் அதிகம் பயன்பெறும் வகையில் அவர்களுக்கு சிறப்பு மதிப்பெண் வழங்க வேண்டும்.
     முதுநிலை பட்டமேற்படிப்பு சேர்க்கைக்கு நிரந்தரத் தீர்வாக, அனைத்து அரசு மருத்துவர்களுக்கும் முதுநிலை பட்டப்படிப்பில் 50 சதவீத இடஒதுக்கீடு வழங்க வகை செய்யும் தனி சட்டத்தை வருகிற சட்டப்பேரவை கூட்டத் தொடரிலேயே தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும்.
     சமூக நீதிக்கு எதிரான நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு நிரந்தர விலக்கு அளிக்க குடியரசுத் தலைவரிடம் ஒப்புதல் பெற வேண்டும். அரசு மருத்துவர்களுக்கு மத்திய அரசுக்கு
     இணையான ஊதியம், இதரப் படிகள் மற்றும் பழைய ஓய்வூதியத் திட்டம் போன்றவற்றை அமல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தினர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai