குடியிருப்புப் பகுதி பாதிக்காமல் புதிய பாலம் கட்டக் கோரிக்கை

விழுப்புரம் மாவட்டம் மேட்டுப்பாளையம்-கடலூர் மாவட்டம் குமாரமங்கலம் இடையே தென்பெண்ணை ஆற்றில் அமைக்கப்படும் மேம்பாலம் திட்டத்தில் இணைப்பு சாலைப் பணியை குடியிருப்புப் பகுதிகள் பாதிக்காத வகையில்

விழுப்புரம் மாவட்டம் மேட்டுப்பாளையம்-கடலூர் மாவட்டம் குமாரமங்கலம் இடையே தென்பெண்ணை ஆற்றில் அமைக்கப்படும் மேம்பாலம் திட்டத்தில் இணைப்பு சாலைப் பணியை குடியிருப்புப் பகுதிகள் பாதிக்காத வகையில் நிறைவேற்ற வேண்டும் என்று விழுப்புரம் ஆட்சியரகத்தில் மேட்டுப்பாளையம் பொதுமக்கள் மனு அளித்தனர். 
விழுப்புரம் வட்டம், சிறுவந்தாடு அருகேயுள்ள மேட்டுப்பாளையத்துக்கும், எதிர்புறத்தில் கடலூர் மாவட்டம்,  பண்ருட்டி அருகேயுள்ள குமாரமங்கலத்துக்கும் இடையே தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே மேம்பாலம் அமைக்க வேண்டும் என்று பொது மக்கள் 50 ஆண்டு காலமாக கோரிக்கை வைத்து வருகின்றனர்.  இந்த நிலையில், கடலூர் மாவட்ட அமைச்சரான எம்.சி.சம்பத்தின் சொந்த ஊர் குமாரமங்கலம் என்பதால், அவரது  நடவடிக்கையால், மேட்டுப்பாளையம்-குமாரமங்கலம் இடையே தென்பெண்ணையில் பாலம் கட்டுவதற்கு அனுமதி அளித்து தமிழக அரசு நிதி ஒதுக்கியது.
 கடலூர் மாவட்ட நெடுஞ்சாலைத் துறையினர், இந்தப் பகுதியில் ஆற்றில் மேம்பாலம் கட்டுவதற்காக ஆய்வு செய்து, அண்மையில்  பணிகளைத் தொடங்கினர். மேலும், மேட்டுப்பாளையத்தில் மேம்பாலம் இணைப்புச் சாலை வரும் இடத்தில், விழுப்புரம் வட்டாட்சியர் சையத்மெஹமுத் தலைமையிலான வருவாய்த் துறை அதிகாரிகள் அண்மையில் ஆய்வு செய்தனர். இந்த பாலத்தின் கரையில் வரும் இணைப்புச் சாலை, மேட்டுப்பாளையம் குடியிருப்புப் பகுதி வழியாக அமையவுள்ளதாக அறிந்த அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். குடியிருப்புகளை பாதிக்காத வகையில் இணைப்புச்சாலையை மாற்றியமைக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். 
இந்த நிலையில் விழுப்புரம் மாவட்ட ஆட்சியரை மேட்டுப்பாளையம் மக்கள் வெள்ளிக்கிழமை சந்தித்து கூறியதாவது: 
பாலம் வருவது வரவேற்கத்தக்கது. இதன் மூலம் இரு மாவட்ட மக்கள் பயன்பெறுவர். ஆனால், மேட்டுப்பாளையம் பகுதியில் வீடுகளுக்கு நடுவே பாலத்தின் இணைப்பு சாலை வருகிறது. 
இதை மாற்றி, பழைய சாலை செல்லும் நிலப்பகுதிகள் வழியாக அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com