போதிய மழையின்மையால் மக்கள் ஏமாற்றம்

கஜா புயல் காரணமாக விழுப்புரம் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தபோதிலும், வறட்சியை சமாளிக்கும் வகையில் போதிய அளவு பெய்யாததால் மக்கள் ஏமாற்றமடைந்தனர்.

கஜா புயல் காரணமாக விழுப்புரம் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தபோதிலும், வறட்சியை சமாளிக்கும் வகையில் போதிய அளவு பெய்யாததால் மக்கள் ஏமாற்றமடைந்தனர்.
 கஜா புயல் தாக்கத்தின் காரணமாக, விழுப்புரம் மாவட்டத்தில் வியாழக்கிழமை இரவு 11 மணிக்குத் தொடங்கி பரவலாக மழை பெய்தது. கடலோரப் பகுதிகளான வானூர், மரக்காணம் வட்டாரங்களில் தொடர்ச்சியாக லேசான மழை பெய்தது. வெள்ளிக்கிழமை அதிகாலை விழுப்புரம், உளுந்தூர்பேட்டை, விக்கிரவாண்டி, வளவனூர், திண்டிவனம் உள்ளிட்ட மாவட்டத்தின் பிற பகுதிகளில் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக பலத்த மழை கொட்டியது. இதையடுத்து, பகல் 11 மணி வரை லேசான மழை பெய்து ஓய்ந்தது.
 விழுப்புரம் நகரில் மழை காரணமாக இந்திரா நகர் ரயில்வே தரைப்பாலத்தில் வழக்கம் போல தண்ணீர் தேங்கியது. இதனால், வாகன ஓட்டிகள் அவதிப்பட்டுச் சென்றனர். பழைய பேருந்து நிலையம் எதிரேயும், நேருஜி சாலை, கே.கே. சாலை சந்திப்பு, ரங்கநாதன் சாலை, மருத்துவமனை சாலை தீயணைப்பு நிலையம் எதிரேயும் சாலையோரம் மழை நீர் வெளியேற வழியின்றி குளம் போல் தேங்கியது.
 வெள்ளிக்கிழமை அதிகாலை மழை தீவிரமாக இருந்ததால், பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. புயல் பாதிப்பில்லாததால் மக்கள் மகிழ்ச்சியடைந்தாலும், நீண்ட நாள் வறட்சியை சமாளிக்கும் வகையில் போதிய அளவு மழை பெய்யாததால் ஏமாற்றமடைந்தனர்.
 மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை காலை வரை பதிவான மழையளவு (மி.மீட்டரில்): விழுப்புரம் 51, திண்டிவனம் 17, திருக்கோவிலூர் 16, உளுந்தூர்பேட்டை 32, வானூர் 36, சங்கராபுரம் 23, கள்ளக்குறிச்சி 20, முண்டியம்பாக்கம் 25, சூரப்பட்டு 30, செம்மேடு 40, அவலூர்பேட்டை 41, வளத்தி 32, மணலூர்பேட்டை 22. மொத்த அளவு 845 மி.மீ. சராசரி 20 மி.மீ.
 வெள்ளிக்கிழமை பகல் பெய்த மழையளவு: செஞ்சி 24, திருக்கோவிலூர் 19, ஈருடையாம்பட்டு 19, திண்டிவனம் 22, விழுப்புரம் 23, உளுந்தூர்பேட்டை 28, கள்ளக்குறிச்சி 35, மரக்காணம் 25, வானூர் 15, முண்டியம்பாக்கம் 23, கெடார் 42, செம்மேடு 19, வள்ளம் 18, சூரப்பட்டு 19, முகையூர் 45, விருகாவூர் 21, மணலூர்பேட்டை 20, கோலியனூர் 15. மொத்தம் 688 மி.மீ. சராசரியாக 17 மி.மீ.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com