ஊட்டச்சத்து விழிப்புணர்வு கண்காட்சி 

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தேசிய ஊட்டச்சத்து மாத விழா விழிப்புணர்வு கண்காட்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தேசிய ஊட்டச்சத்து மாத விழா விழிப்புணர்வு கண்காட்சி திங்கள்கிழமை நடைபெற்றது.
 இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் இல.சுப்பிரமணியன் தலைமை வகித்து, ஊட்டச்சத்து பற்றிய கண்காட்சியைத் திறந்து வைத்தார்.
 தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் தலைமையில் அனைவரும், ஊட்டச்சத்துடன் வாழவும், ஊட்டச்சத்து பிரசாரத்தை பேரியக்கமாக மாற்றவும், தங்களது வீடு, கிராமம், நகரத்தில் ஊட்டத்தின் மகத்துவத்தை பேரொளியாக எழுப்புவது என்றும் தேசிய ஊட்டச்சத்து உறுதிமொழியை அரசு அலுவலர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் ஏற்றுக்கொண்டனர். இதனையடுத்து, விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தையும் மாவட்ட ஆட்சியர் தொடக்கி வைத்தார். அதில், கர்ப்பகால பராமரிப்பு, 6 மாதம் வரை தாய்ப்பால் மட்டுமே குழந்தைகளுக்கு ஊட்டுதல், 6 மாதத்திற்குப் பிறகு இணை உணவு ஊட்டுதல், ரத்தசோகையை தடுத்தல், குழந்தைகளின் வயதுக்கு ஏற்ற எடை மற்றும் உயரம் ஆகியவற்றை கண்காணித்தல், பெண் குழந்தைகளின் கல்வி மற்றும் குழந்தை திருமணத்தை தடுத்தல், சுத்தம் மற்றும் சுகாதாரம் ஆகியவற்றை உறுதி செய்தல் போன்றவை குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
 குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலர்கள், மேற்பார்வையாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் கலந்துகொண்டு, பொது மக்களுக்கு ஊட்டச்சத்தின் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
 கண்காட்சியில் ஊட்டச்சத்து உணவுகள், காய்கறி உள்ளிட்ட இயற்கை உணவுகளை நேரடியாக வைத்தும், ஊட்டச்சத்து உணவுகள் வழங்கியும் பொது மக்களுக்கு விளக்கினர். கண்காட்சியை காவல் ஆய்வாளர் ராஜன், உதவி ஆய்வாளர்கள் ஆனந்தன், சரஸ்வதி மற்றும் போலீஸார், பொது மக்கள் பலர் பார்வையிட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com