விழுப்புரம் மாவட்டத்தில் பெரும்பாலான கடைகள் அடைப்பு: பேருந்துகள் இயங்கின

விழுப்புரம் மாவட்டத்தில் திங்கள்கிழமை முழு அடைப்பையொட்டி, பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டதால், மக்கள் அவதியடைந்தனர். எனினும், பேருந்துகள் வழக்கம்போல இயங்கின.

விழுப்புரம் மாவட்டத்தில் திங்கள்கிழமை முழு அடைப்பையொட்டி, பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டதால், மக்கள் அவதியடைந்தனர். எனினும், பேருந்துகள் வழக்கம்போல இயங்கின. 20 இடங்களில் மறியலில் ஈடுபட்ட காங்கிரஸ் உள்ளிட்ட கட்சியினர் 547 பேர் கைது செய்யப்பட்டனர்.
 பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து காங்கிரஸ் சார்பில் திங்கள்கிழமை நடைபெற்ற நாடு தழுவிய முழு அடைப்பு போராட்டத்தில், தமிழகத்தில் திமுக, மதிமுக, இடதுசாரிகள், விசிக, தவாக உள்ளிட்ட கட்சியினரும் பங்கேற்றனர்.
 விழுப்புரம் மாவட்டத்தில் விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திண்டிவனம் உள்ளிட்ட அனைத்து நகரங்களிலும் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. இதனால், முக்கிய வீதிகள் வெறிச்சோடின. காலையில் ஊர்வலமாக வந்த காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சியினர் சிலர் கடைகளை மூடுமாறு வலியுறுத்தினர்.
 அரசுப் பேருந்துகள் வழக்கம் போல் இயங்கின. ஓரிரு தனியார் பேருந்துகளும் இயங்கின. ஷேர் ஆட்டோக்கள் இயங்கவில்லை. பள்ளி, கல்லூரிகளுக்குச் செல்வோர் தவிப்புக்குள்ளாகினர். வெளியூர்களிலிருந்து திங்கள்கிழமை விழுப்புரம் வந்த பயணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இவர்கள், ஆட்டோக்களில் கூடுதல் கட்டணம் கொடுத்து முக்கிய இடங்களுக்குச் சென்றனர்.
 புதுவை பயணிகள் தவிப்பு:
 விழுப்புரத்திலிருந்து புதுவை செல்லும் தனியார் பேருந்துகள் இயங்கவில்லை. ஓரிரு அரசுப் பேருந்துகள் மட்டும் புதுவை எல்லை வரை இயக்கப்பட்டன. இதனால், வேலைக்குச் செல்வோர், மருத்துவமனைகளுக்குச் செல்லும் நோயாளிகள் அவதியடைந்தனர். கார், வேன் உள்ளிட்ட வாகன ஓட்டிகள், விழுப்புரம் பேருந்து நிலையத்துக்கு வந்து கூடுதல் கட்டணம் வசூலித்து புதுவைக்கு ஏற்றிச் சென்றனர்.
 20 இடங்களில் மறியல்: முழு அடைப்புப் போராட்டத்தையொட்டி காங்கிரஸ், திமுக, கம்யூனிஸ்ட், விசிக, தவாக உள்ளிட்ட கட்சியினர் 19 இடங்களில் சாலை மறியலிலும், ஒரு இடத்தில் ரயில் மறியலிலும் ஈடுபட்டனர்.
 விழுப்புரம் அருகே மாம்பழப்பட்டில் விழுப்புரம்-காட்பாடி பயணிகள் ரயில் முன் மறியலில் ஈடுபட்ட செண்பகவல்லி தலைமையிலான கம்யூனிஸ்ட் (எம்எல்) கட்சியினர் 30 பேர் கைது செய்யப்பட்டனர். விழுப்புரம் நான்குமுனை சாலை சந்திப்பில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலர் ஏ.வி.சரவணன் தலைமையில், மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் சுப்பிரமணியன், சிஐடியூ முத்துக்குமார், மூர்த்தி, வீரமணி உள்ளிட்ட 30 பேர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களை, விழுப்புரம் மேற்கு போலீஸார் கைது செய்தனர்.
 கண்டமங்கலத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலாளர் குப்புசாமி தலைமையில் மறியலில் ஈடுபட்ட 15 பேரும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலர் பாலமுருகன் தலைமையில் மறியலில் செய்த 17 பேரும் கைது செய்யப்பட்டனர். திருச்சிற்றம்பலம் கூட்டுச்சாலையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலர் சேகர் தலைமையில் மறியலில் ஈடுபட்ட 20 பேர் கைது செய்யப்பட்டனர்.
 திருநாவலூரில் ஒன்றியச் செயலர் ஏழுமலை தலைமையில் மறியலில் ஈடுபட்ட கம்யூனிஸ்ட் (எம்எல்) கட்சியினர் 17 பேரும், உளுந்தூர்பேட்டையில் காங்கிரஸ் வட்டத் தலைவர் ஷேக்தாவூத் தலைமையில் மறியல் ஈடுபட்ட 45 பேரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் ஆனந்தன் தலைமையில் மறியலில் ஈடுபட்ட அந்தக் கட்சியினர் 45 பேரும் கைது செய்யப்பட்டனர்.
 இந்த வகையில், மாவட்டம் முழுவதும் 20 இடங்களில் மறியலில் ஈடுபட்ட காங்கிரஸ், தோழமைக் கட்சியினர் 547 பேர் கைது செய்யப்பட்டு, மாலையில் விடுவிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் முக்கிய இடங்களில் போலீஸார் குவிக்கப்பட்டு, பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com