திருக்கோவிலூர் அருகே  3 குழந்தைகளுடன் தாய் தீயில் கருகிச் சாவு

விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூர் அருகே புதன்கிழமை வீட்டில் 3 குழந்தைகளுடன் தாய் தீயில் உடல் கருகி உயிரிழந்து கிடந்தார்.

விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூர் அருகே புதன்கிழமை வீட்டில் 3 குழந்தைகளுடன் தாய் தீயில் உடல் கருகி உயிரிழந்து கிடந்தார். அவர் குடும்ப பிரச்னை காரணமாக குழந்தைகளுடன் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டாரா என்று போலீஸார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
திருக்கோவிலூரை அடுத்த கீழக்கொண்டூர் மாதா கோவில் தெருவைச் சேர்ந்த ராமசாமி மகன் இளங்கோவன்(38). இவருக்கும், கொத்தமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த கலியன் மகள் தனலட்சுமிக்கும் (31) கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களது மகன்கள் கமலேஷ்வரன் (6), விஷ்ணுபிரியன் (4), ருத்ரன் (9 மாதம்).
கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு குடும்பத்துடன் இளங்கோவன் விழுப்புரம் வழுதரெட்டி பகுதிக்கு குடிபெயர்ந்தார். விழுப்புரம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் அவர் சுமை தூக்கும் கூலி வேலை செய்து வருகிறார். தனலட்சுமி குடும்ப வருமானத்துக்காக வீட்டில் தையல் தொழில் செய்து வந்தார். குழந்தைகள் கமலேஷ்வரன் முதல் வகுப்பும், விஷ்ணுப்பிரியன் எல்கேஜியும் படித்து வந்தனர்.
இந்த நிலையில், தம்பதி இடையே அடிக்கடி தகராறு ஏற்படுவது வழக்கமாம். கடந்த திங்கள்கிழமை இரவு ஏற்பட்ட தகராறில் கோபித்துக் கொண்டு கீழக்கொண்டூரில் உள்ள கணவரின் வீட்டுக்கு குழந்தைகளுடன் தனலட்சுமி சென்று விட்டார். அங்கு மாமனாருடன் அவர் வசித்து வந்தார். 
புதன்கிழமை காலை 6 மணியளவில் எழுந்த தனலட்சுமி, குழந்தைகளுக்கு தேநீர் வாங்கி வருமாறு மாமனார் ராமசாமியை கடைக்கு அனுப்பியதாகத் தெரிகிறது. அவர் திரும்பி வந்து பார்த்தபோது, கூரை வீடு தீப்பிடித்து எரிந்தும், வீட்டினுள் தனலட்சுமி, அவரது மகன்கள் கமலேஷ்வரன், விஷ்ணுபிரியன், ருத்ரன் ஆகியோர் உடல் கருகி உயிரிழந்திருந்து கிடந்ததும் தெரியவந்தது. 
இதுகுறித்து காவல் துறை, தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
திருக்கோவிலூர் காவல் துணைக் கண்காணிப்பாளர் ஏ.மகேஷ், காவல் ஆய்வாளர் ரத்தினசபாபதி மற்றும் அரகண்டநல்லூர் போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, வீட்டில் கருகிய நிலையில் கிடந்த சடலங்களைக் கைப்பற்றி விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடல் கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும், சந்தேக மரணம் என்ற பிரிவில் வழக்குப் பதிவு செய்து, இளங்கோவனிடம் விசாரித்து வருகின்றனர்.

கணவர் மீது புகார் 
குழந்தைகளுடன் தனலட்சுமி உயிரிழந்ததற்கு அவரது கணவர் இளங்கோவன்தான் காரணம் என்று,  தனலட்சுமியின் அண்ணன் மதியழகன் விழுப்புரம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புதன்கிழமை மாலையில் புகார் செய்தார். 
இளங்கோவன் அடிக்கடி தனது தங்கையை அடித்து துன்புறுத்தி வந்ததாகவும், அவர்களை தீ வைத்து கொலை செய்திருக்கலாம் என்றும் புகார் மனுவில் தெரிவித்துள்ளார். இதுகுறித்து உரிய விசாரணை நடத்தப்படும் என்று காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார் தெரிவித்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com