சமூக வலைதளத்தில் அவதூறு சங்கராபுரத்தில் இரு தரப்பினர் மோதல்; சாலை மறியல்

சங்கராபுரத்தில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலை தொடர்ந்து வெள்ளிக்கிழமை சாலை மறியல் நடைபெற்றது. இதனால், சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

சங்கராபுரத்தில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலை தொடர்ந்து வெள்ளிக்கிழமை சாலை மறியல் நடைபெற்றது. இதனால், சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
குறிப்பிட்ட சமூகத்தினரை அவதூறாகப் பேசி அடையாளம் தெரியாத நபர் சமூக வலைதளத்தில் விடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். இதைப் பார்த்த, சங்கராபுரம் பகுதி ஆட்டோ  ஓட்டுநர்களான மல்லாபுரம் கிராமத்தைச் சேர்ந்த நடேசன் மகன் பாஸ்கரன் (27), பாவளம் கிராமத்தைச் சேர்ந்த கிருஷண்ன் மகன் மணிகண்டன் (23), அருணாசலம் மகன் கணபதி (20) ஆகியோர் மற்றொரு சமூகத்தை அவதூறாகப் பேசி தனித் தனியாக, சமூக வலைதளத்தில் வீடியோ வெளியிட்டதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், வெள்ளிக்கிழமை சங்கராபுரம் அருகே உள்ள தியாகராஜபுரம் கிராமம் பகுதியில் பாஸ்கரன் ஆட்டோ ஓட்டிச் சென்றார். அப்போது, சிலர் அவரை வழிமறித்து வீடியோ வெளியிட்டது தொடர்பாக தகராறு செய்தனராம். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த சங்கராபுரம் போலீஸார், பாஸ்கரனை மீட்டு, விசாரணைக்காக காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.
ஆனால், காவல் நிலையத்தில் 300-க்கும் மேற்பட்டோர் குவிந்தனர். அவர்கள், அவதூறு விடியோ  வெளிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர். அப்போது, அங்கு வந்த காசிலிங்கம் மகன் ஏழுமலை, அமமுக ஒன்றியச் செயலர் வேலாயுதம் ஆகியோர், 3 பேரும் தெரியாமல் தவறு செய்துவிட்டனர். பிரச்னையை பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துக்கொள்ளலாம் என்று கூறினர். ஆனால், எதிர்தரப்பினர் பாஸ்கரன் உள்ளிட்ட  3 பேர் மீதும் வழக்குப் பதிந்து  சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.
இந்த நிலையில், சங்கராபுரத்துக்கு நடந்து சென்ற ஏழுமலையை சிலர் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதையறிந்த அவரது ஆதரவாளர்கள் 200-க்கு மேற்பட்டோர் சங்கராபுரம் காவல் நிலையத்தில் திரண்டனர். ஏழுலையை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர். மேலும், அவர்கள் அனைவரும் சங்கராபுரம் மும்முனைச் சந்திப்புக்கு சென்று சாலை மறியலில் ஈடுபட்டனர். அதேவேளையில், எதிர்தரப்பினரும் அந்தப் பகுதியில் குவிந்ததால் மோதல் ஏற்படும் சூழல் உருவானது. இதுகுறித்து தகவல் அறிந்த ஏடிஎஸ்பி முகிலன், திருக்கோவிலூர் டிஎஸ்பி மகேஷ், சங்கராபுரம் காவல் ஆய்வாளர் முருகேசன் ஆகியோர் தலைமையிலான போலீஸார் விரைந்து வந்து இரு தரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தினர். இருந்தபோதும், மறியல் போராட்டம் தொடர்ந்தது. இதனால் அந்தப் பகுதியில் மாலை 5.15 மணி முதல் இரவு 7.30 மணி வரை போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதையடுத்து போலீஸார் மறியலில் ஈடுபட்டவர்களை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்தனர். 
இந்தச் சம்பவங்களை அடுத்து சங்கராபுரம் - கள்ளக்குறிச்சி சாலை, பேருந்து நிலைய சாலை, திருக்கோவிலூர் சாலை பகுதிகளில் மாலையிலேயே கடைகள் அடைக்கப்பட்டன. மேலும், அந்தப் பகுதியில் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com