அணைகள், கடலில் விநாயகர் சிலைகள் கரைப்பு

கோட்டக்குப்பம், வானூர், திண்டிவனம் உள்ளிட்ட பகுதிகளில் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு,


கோட்டக்குப்பம், வானூர், திண்டிவனம் உள்ளிட்ட பகுதிகளில் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, மரக்காணம் அருகேயுள்ள எக்கியார்குப்பம் உள்ளிட்ட பகுதிகளில் சனிக்கிழமை கடலில் கரைக்கப்பட்டன.
விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி, விழுப்புரம் மாவட்டத்தில் 2,500-க்கும் மேற்பட்ட இடங்களில் பொதுமக்கள், இளைஞர்கள் மற்றும் இந்து அமைப்புகள் சார்பில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு நடைபெற்றது.
இதில், மரக்காணம் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் மட்டும் 300-க்கும் மேற்பட்ட இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன.
3 நாள்கள் வழிபாட்டுக்குப் பிறகு, இந்த சிலைகளை நீர் நிலைகளில் கரைக்கும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.
இதில் மரக்காணம், திண்டிவனம், செஞ்சி, கோட்டக்குப்பம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து 300-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் மேள தாளம் முழங்க ஊர்வலமாக மரக்காணம் பகுதிக்கு கடலில் கரைக்க எடுத்து வந்தனர்.
இதற்கிடையே, மரக்காணம் பகுதியில் வழக்கத்துக்கு மாறாக சனிக்கிழமை காலை முதலே கடல் சீற்றம் அதிகமாக இருந்தது. இதனால், சிலைகளை கரைக்க பொதுமக்களை போலீஸார் அனுமதிக்கவில்லை.
பின்னர், போலீஸ் பாதுகாப்புடன் எக்கியார்குப்பம், கைப்பாணிகுப்பம் பகுதிகளில் மீனவர்கள் உதவியுடன், படகுகளில் எடுத்துச் சென்று விநாயகர் சிலைகளை கரைத்தனர். இதுபோன்று, திருக்கோவிலூர் சுற்றுவட்டாரத்தில் வைக்கப்பட்ட சிலைகள் அரகண்ட நல்லூர் அதுல்யநாதேஸ்வரர் குளத்திலும், சங்கராபுரம், ரிஷிவந்தியம் பகுதியில் வைக்கப்பட்ட சிலைகள் சங்கராபுரம் ஏரியிலும், கள்ளக்குறிச்சி சுற்றுவட்டாரத்தில் வைக்கப்பட்ட சிலைகள் கோமுகி அணையிலும், மயிலம் சுற்றுவட்டாரத்தில் வைக்கப்பட்ட சிலைகள் வீடூர் அணையிலும், உளுத்தூர்பேட்டை சுற்றுவட்டாரத்தில் வைக்கப்பட்ட சிலைகள் உளுந்தூர்பேட்டை ஏரியிலும், திருவெண்ணெய் நல்லூர், திருநாவலூர் பகுதியில் வைக்கப்பட்ட சிலைகள் திருநாவலூர் ஏரியிலும் கரைக்கப்பட்டன.
விழுப்புரத்தில் சிலைகள் கரைக்க அனுமதி மறுப்பு:
விழுப்புரம் காவல் உள்கோட்டத்துக்கு உள்பட்ட பகுதிகளில் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் சனிக்கிழமை நீர் நிலைகளில் கரைக்க காவல்துறை
அனுமதி அளிக்கவில்லை.
ஏனெனில், விழுப்புரத்தில் திமுக கட்சி விழா சனிக்கிழமை நடைபெற்றதால், அதற்கு இடையூறு ஏற்படும் என்பதால், பாதுகாப்பு கருதி அனுமதி வழங்கப்படவில்லை.
மாறாக ஞாயிற்றுக்கிழமை சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் சென்று நீர்நிலைகளில் கரைக்க காவல் துறை அறிவுறுத்தியுள்ளது.
உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டை, திருநாவலூர், திருவெண்ணைய்நல்லூர் ஆகிய ஒன்றியங்களில் வைக்கப்பட்டிருந்த 200-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகளை மேள, தாளம் முழங்க சனிக்கிழமை மாலை ஊர்வலமாக எடுத்துச் சென்று அந்தந்த பகுதிகளில் உள்ள நீர் நிலைகளில் கரைத்து கொண்டாடி மகிழ்ந்தனர். விநாயகர் சிலை ஊர்வலத்துக்கு, உளுந்தூர்பேட்டை டி.எஸ்.பி ராஜேந்திரன் மேற்பார்வையில், காவல் ஆய்வாளர் ஷாகுல் அமீது தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com